தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போது இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து எல்லாம் திரைமறைவாக பேசத் துவங்கி உள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவால் இதுவரை திமுக, அதிமுக என்று இருந்த இருமுனைப் போட்டி தற்போது தமிழகத்தில் மும்முனை போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையும் என்றும், அதிமுக தலைமையில் தமிழகத்தில் பாஜக தேர்தலை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுகவிற்கு இரண்டு சக்தி வாய்ந்த எதிர்கட்சியினர் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக பார்க்கப்படும் திமுக கட்சியினர் சொல்லி, பாஜக கட்சி கொடியை எரித்ததாக கோவையில் இளைஞர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை கணபதி பகுதியில் உள்ள கே.கே நகரில் பாஜக கொடி கம்பம் உள்ளது. அங்கு பாஜக கொடி ஏற்றப்பட்டு கொடி பறந்தது. இன்று காலை 10 மணியளவில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் தான் கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால், கொடி கம்பத்தில் இருந்த கயிற்றை அறுத்தார். பாஜக கொடியை கீழே இறக்கினார்.
இதையும் படிங்க: போதை மாஃபியா கேங்.. மகாராஷ்டிரா, இமாச்சலில் லிங்க்.. கோவையில் சிக்கிய கும்பல்..!

பின்னர் பாஜக கொடியை கத்தியால் கிழித்த அந்த வாலிபர், பிறகு அந்த கொடியை சாலையில் போட்டு தீ வைத்தார். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த வாலிபர் கொடியில் வைத்த தீ உடனே அணைந்துவிட்டது. இதனால் மீண்டும் கொடியை எரிக்க தீப்பெட்டி வாங்கி வர அந்த வாலிபர் அருகிலுள்ள கடைக்கு சென்றார். அதற்குள் பாஜ விளையாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் பிரனேஷ் உள்ளிட்ட பாஜகவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கொடியை எரிக்க முயன்ற வாலிபரை தடுத்து நிறுத்திய பாஜக தொண்டர்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். யார் சொல்லி இந்த வேலையை செய்தாய்? என பாஜகவினர் கேள்வி கேட்டபடி அந்த வாலிபரை அடி வெளுத்தனர். திமுகவினர் சொல்லித் தான் செய்தேன் என அந்த வாலிபர் சொன்னார். பாஜகவினர் அடி வெளுத்ததில் அந்த வாலிபருக்கு மூச்சு வாங்கியது. உடனே இதுகுறித்து போலீசாருக்கு பாஜகவினர் தகவல் சொன்னார்கள். சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று வாலிபரை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

பாஜ கொடியை எரிக்க முயன்ற வாலிபர் ஒண்டிப்புதுார் பகுதியை சேர்ந்த டோமினிக் பிரசாந்த் என்பதும் அவருக்கு 28 வயது என்பது விசாரணையில் தெரிய வந்தது. டோமினிக் பிரசாந்த் கணபதி பகுதியில் அறை எடுத்து வேலைக்கு சென்று வந்துள்ளார் என தெரிய வந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மனநல பாதிப்புக்காக மாத்திரை சாப்பிட்டு வருகிறார் என விசாரணையில் தெரிய வந்ததாக, போலீசார் கூறினர்.
பாஜக கொடியை எரிக்க முயன்ற வாலிபர் மீது பாஜக நிர்வாகி நவீன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். பாஜக கொடியை வாலிபர் தீ வைத்து எரித்த சம்பவம் கோவை பாஜக வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ₹524 கோடி ஒப்பந்தத்தில் ஊழல்? செல்வப்பெருந்தகைக்கு சிக்கல்..! அண்ணாமலை கேள்வி..!