நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் இ பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி , கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதில், உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் இறுதி வரை, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி உதகை மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் புதிய வாகனக் கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட வாகன எண்ணிக்கை அடிப்படையில் இ-பாஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே டூ ஜூன் மாதங்களில் இந்த தேதியைக் குறிச்சிக்கோங்க... மிஸ் பண்ணிடாதீங்க...!

ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படும். ஆனால் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ், சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லைகள் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்ளிட்ட 14 சோதனைச் சாவடிகளில் இபாஸ் பெற்றுள்ளதை தீவிரமாக சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, இன்று முதல் ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணியரின் வாகனங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டு, அனுமதிக்கப்படும் என்றும் சுற்றுலா பயணிகள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம் எனவும் கூறினார். மேலும், QR CODE முறையிலும் சோதனைச் சாவடிகளில், ஸ்கேன் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மே 16-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி.. ஆட்சியர் அறிவிப்பு..!