கோடை வெயில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கோடை விடுமுறையில் தான் நம் வீட்டு குழந்தைகளும் நம்முடன் இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்க நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் உதகை.

மலை மாவட்டமான நீலகிரியில் நிலவும் குளிர்ச்சியான சீசனை அனுபவிக்க கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் அங்கு குவிவது வழக்கம். அவ்வாறு நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!

நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தோட்டக்கலை துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் இணையவழி வாயிலாக பங்கேற்றார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

முன்னதாக கோத்தகிரியில் மே 3 மற்றும் 4-ந் தேதிகளில் 13-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் மே 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 11-வது வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 20-வது ரோஜா கண்காட்சியும் நடைபெற உள்ளது.
குன்னூரில் மே 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 65-வது பழக்கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்பவர்களே... ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு...!