பழனி முருகன் கோயில் ரோப்காரில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 30 ம் தேதி ஒரு நாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். குறிப்பாக திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் மின் இழுவை ரயில் ,படிப்பாதை, யானை பாதை, ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். மலை கோயிலுக்கு முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக செல்ல இந்த வசதிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ரோப் காரில் சென்றால் 3 நிமிடங்களில் மலைக் கோவிலை அடைந்து விடலாம். இதனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அவ்வப் போது மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் ரோப்காரில் மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக ரோப் கார் சேவை குறிப்பிட்ட நாட்கள் இயங்காது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார்.. ஹெச். ராஜா அதிரடி கணிப்பு

முருகனுக்கு உகந்த தைப்பூசத் திருநாள் விரைவில் வரவுள்ளது. இந்நன்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிவார்கள். இதனால் ரோப் காரில் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 30 ம் தேதி நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்தி மலை மீது சென்று சாமி தரிசனம் செய்து வரலாம் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாத்திகனாக மாறியதும் லைஃப் ஜாலியா இருக்கு ..நடிகர் சத்யராஜ் பேச்சு