தமிழகத்தில் ரவுடிகள் அட்டகாசத்தை குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தலைமறைவாக உள்ள ரவுடிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டும் வருகின்றனர். ஆனால், பழிக்கு பழி வாங்குவதும், தலைக்கு விலைக் கொடுப்பதுமான சம்பவங்களும் அரங்கேறி தான் வருகின்றன. இதன் அடிப்படையிலேயே ரவுடி வசூல் ராஜாவும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல் ராஜா. இவர் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக விளையாட்டு அணி செயலாளராகவும் இருந்துள்ளார். சரித்திர பதிவேட்டு குற்றவாளியான ராஜா மீது காஞ்சி, சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர், தாதா ஸ்ரீதர் நண்பரான தியாகுவுக்கு வலது கரமாக செயல்பட்டு வந்ததாகவும், தொழிலதிபர்கள் முதல் வியாபாரிகள் வரை பலரிடமும் வசூல்வேட்டை செய்து வந்ததால் இவர் வசூல் ராஜா என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மருமகளின் கள்ளக்காதலை கண்டித்த மாமனார்.. கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலன்.. மரணத்தில் விலகிய மர்மம்..!

காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் இருந்து, திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே பிற்பகல் 12:00 மணியளவில் தனியாக இருந்த வசூல் ராஜா மீது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர், திடீரென நாட்டு வெடிகுண்டு வீசினர்.
இதில் நிலை தடுமாறி விழுந்த வசூல் ராஜாவின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனால் படுகாயமடைந்த வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரை வெட்டிய நபர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காஞ்சி தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொலை செய்த இளைஞர்கள் தப்பித்து ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இருசக்கர வாகனத்தில் ஒருவர் வேகமாக ஒட்டி செல்வதும், பின்னால் ஒருவர் ஓடுவதும் பதிவாகி இருந்தது.
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்ப முயன்று கீழே விழுந்த 4 பேருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது. 4 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், கொலைக்கு பின்புலமாக செயல்பட்டதாக மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 3 மாதக் காலம் திட்டம்போட்டு ரவுடியை தீர்த்துக் கட்டியதும் அம்பலமாகி உள்ளது.
இதையும் படிங்க: பறிபோன விவசாய தம்பதியின் உயிர்.. கொலையில் முடிந்த கோழி மேய்ச்சல் பிரச்சனை.. உறவினர் கைது..!