சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அவருடன் பேசிக் கொண்டு இருந்தார். அடுத்த சில நிமிடங்களில் அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.
அடுத்த நிமிடமே அதே கத்தியால் தமது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கத்தியால் குத்தியவர் பெயர் மோகனபிரியன் என்பதும், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும், அந்த பெண் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மேலும் போலீசார் கூறியதாவது; கல்லூரி மாணவிக்கு, சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன பிரியன் என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரவு, பகலாக முகம் பார்க்காமலே பேசி பழகி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவரும் நேரில் பார்த்து பேச முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 நாளில் மகனின் திருமணம்.. தந்தை கத்தியால் குத்திக்கொலை.. சமாதானம் செய்ய சென்றவருக்கு விபரீதம்..!

சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி இன்ஸ்டாகிராம் காதலனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தான் மாணவியை விட அந்த இளைஞர் ஒரு வயது இளையவர் என்றும், மோகன பிரியன் ஐஐடி முடித்துவிட்டு தற்போது வேலை, வெட்டி எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வருவதும் மாணவிக்கு தெரியவந்துள்ளது.
மேலும் மோகன பிரியனை நேரில் பார்த்த பின், இந்த உறவை தொடர மாணவி விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவி, அவருடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக மோகன பிரியனிடம் சரிவர பேசாமல் புறக்கணித்து வந்ததாகவும், மாணவியின் உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய பெண்ணின் தரப்பினர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை அறிந்த இன்ஸ்டாகிராம் காதலன், இன்று உன்னை சந்திக்க வேண்டும். கடைசியாக ஒருமுறை உன்னை சந்திக்க வேண்டும் என கெஞ்சி இருக்கிறார். இந்த நிலையில் இருவரும் இன்று காலை பழைய பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மோகன பிரியன் திடீரென, தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியை குத்தி விட்டு தனது கை மற்றும் கழுத்தில் கத்தியால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் பகுதியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையன்.. தாய், மகனுக்கு கத்திக்குத்து.. குலைநடுங்கும் சம்பவம்..!