கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இவ்வழக்கில் அதேபகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை நியமித்தது. அண்ணா நகர் துணை ஆணையரான சினேக பிரியா தலைமையிலான இக்குழுவினர் ஞானசேகரன் வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஆளுநர் போறது வாக்கிங்னா..உதயநிதி போறது ரன்னிங்கா.. ? தமிழிசை விளாசல் ..!

இந்நிலையில் சிறையில் உள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே நடந்த சம்பவத்தின் பின்னணி பற்றி தெரியவரும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வு பிரிவினர் மனுதாக்கல் செய்தனர். 9 நாட்கள் அனுமதி கோரிய நிலையில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சுப்ரமணியன் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து 20-ந் தேதி எழும்பூர் காவல்நிலையத்தில் வைத்து ஞானசேகரனிடம் சிறப்புப் புலனாய்வு குழுவினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் அன்றைய தினம் நடந்தது என்ன? இதற்கு முன்னர் இதுபோன்ற சம்பவங்களில் ஏதேனும் தொடர்பு உண்டா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து 21-ந் தேதி அண்ணா நகர் காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட ஞானசேகரனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆஹா.. நல்லா இருக்கே இந்த நாடகம்.. முதலமைச்சரை அறிக்கையில் கதறவிட்ட அன்புமணி ராமதாஸ்