தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் RN.ரவி, பாரதிய ஜனதா அகில இந்திய தலைவரும், மத்திய கேபினட் அமைச்சருமான ஜே.பி நட்டா ஆகியோர், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கத்தில், ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 44 நாட்கள் கும்பமேளா நடைபெறுகிறது.

இதில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இதுவரை மட்டும் சுமார் 55 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக உத்திரப்பிரதேச அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகா கும்பமேளா ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க கடந்த ஒரு வார காலமாகவே மும்மொழிக் கொள்கை தொடர்பாக தமிழக அரசியலில் சூடு பிடித்து பொறி பறக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: கும்பமேளா கோலாகலம்.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

குறிப்பாக திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நீயா?நானா? என்ற ரீதியில் கடுமையான வார்த்தை போர் மற்றும் அரசியல் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்து கெட் அவுட் மோடியென குறிப்பிட்டது பாஜகவின் ஈகோவை கிளறியது.
இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலையும், உதயநிதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாடா,போடா என ஏக வசனத்தில் பேசியும் சுமார் 13 லட்சம் கெட் அவுட் ஸ்டாலின் பதிவுகளை எக்ஸ் வலைதள பக்கம் பதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான் சொல்லி வைத்தார் போல் தமிழக ஆளுநர் ரவி, மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி நட்டா, தமிழக பாரதிய ஜனதாவின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒரே நாளில் பிரியாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் மூன்று பேரும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் கெட் அவுட் மோடி பேச்சுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது, பிஜேபியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தமிழகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் ஜே.பி நட்டாவும், அண்ணாமலையும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரது சந்திப்பிற்கு பிறகு ஆளுநர் ரவியும் மீட்டிங்கில் கலந்து கொண்டு தனக்கு வந்த ரிப்போர்ட்டுகள் குறித்தும் மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவிடம் பகிர்ந்து கொண்டாராம்.
ஆளுநர் ரவி, அண்ணாமலை,ஜே.பி நட்டா ஆகியோரது உத்தரப்பிரதேச சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய சந்தேகங்களை எழுப்பி உள்ளது
இதையும் படிங்க: கூட்ட நெரிசல்... ரயில் பெட்டிகளை சூறையாடிய மக்கள்… விபத்துக்கு பிறகும் படையெடுக்கும் பக்தர்கள்..!