நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.
பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், பெரியாரிய இயக்கங்கள், திமுக மட்டுமல்லாது திமுக கூட்டணி கட்சிகளும் சீமானை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே சீமானை பாஜவின் பி டீம் என்று திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், சீமான் தெரிவித்த கருத்து அக்கட்சிகளுக்கு வசதியானது. இந்தச் சூழலில் சீமான் பாஜகவில் சீரலாம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். சிவகாசியில் அவர் பேட்டியளித்தார். "இந்தியாவே போற்றுகின்ற தலைவர்களை பத்திரிகை விளம்பரத்துக்காக அண்ணாமலையும் சீமானும் விமர்சிக்கின்றனர். பாஜக கொள்கைகளுக்காக இதுபோன்ற காரியங்களை சீமான் செய்து வருகிறார். கடந்த காலங்களில் பெரியார் பற்றி சீமான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் உலவுகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளைத்தான் சீமான் பேசி வருகிறார். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு சீமான் துணை நிற்கிறார். இது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கும், தமிழர்களுக்கும் சீமான் செய்யும் துரோகம். நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்.
முதல்வர் கேட்டுக் கொண்டதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஒப்புதல் பெற்று ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிக்கு இண்டியா கூட்டணி கட்சியினர் இணைந்து பாடுபடுவோம்." என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.