தமிழில் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, தென்காசிப்பட்டணம், வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து, மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் களமிறங்கினார். திமுக சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் இருந்தார். பின்னர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

இவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சிறுவயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன், தனது குடும்பத்துடன் அங்கேயே குடியேறிவிட்டார்.
இதையும் படிங்க: மெகாபூகம்பம் வரலாம்.. சுனாமியால் 3 லட்சம் பேர் உயிரிழக்கலாம்: ஜப்பான் அரசு புதிய எச்சரிக்கை..!
இந்நிலையில் தனது மூத்த மகன் தனுஷிற்கு ஊரே மெச்சும் அளவிற்கு ஜப்பானில் கோலாகலமாக திருமணத்தை நடத்தி முடித்தார் நெப்போலியன். கடந்த நவம்பர் 7ம் தேதி அக்ஷயா என்ற பெண்ணுடன் தனுஷிற்கு திருமணம் நடைபெற்றது. இவர்களை சினிமா பிரபலங்களான சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, பாண்டிராஜன், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, ஜப்பானில் உள்ள நடிகரும் முன்னாள் திமுக எம்.பியுமான நெப்போலியன் வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நெப்போலியன், நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, தலைவர் கலைஞர் அவர்களின் மகள் திருமதி கனிமொழி அவர்கள், ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளார்..! நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் திரு சிபி ஜார்ஜ் அவர்கள் கொடுத்த விருந்தில், தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களும், கனிமொழி அவர்களும் நானும், கலந்து கொண்டோம்..! இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, திருமதி கனிமொழி அவர்கள், ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து தனுஷையும் அக்ஷயாவையும் வாழ்த்தினார்கள்…!

சில மணி நேரம் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம்..! மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம்..! இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள்..!
இவ்வாறு நடிகர் நெப்போலியன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜப்பானில் ஏற்படப்போகும் 9 ரிக்டர் நிலநடுக்கம்: 3 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்..!