விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்வதற்கு இரு தரப்பினர் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட பிரிவினரை ஆதிக்கம் நிறைந்த சாதியினர் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கோவில் மூடப்பட்டும், சீல் வைக்கவும் பட்டது. இதனை எதிர்த்து கோவிலில் வழிபாடு செய்வதற்காக வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலை திறக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜி என்பவர் மீண்டும் ஒரு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தற்போது வரை பூசாரிகள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா நடத்தப்படவில்லை என்றும் வாதாடினார்.
இதையும் படிங்க: மச்சான் என்றதற்கு கொலை செய்த விவகாரம்.. தலையில் கல்லைப் போட்டவருக்கு ஆயுள் தண்டனை..

இதனைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி வழக்கறிஞர் கார்த்திகேயனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று திரௌபதி அம்மன் கோவிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: நிறைய லீவு போட்டா எக்ஸாம் எழுத முடியாது.. திட்டவட்டமாக கூறிய நீதீமன்றம்..