ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உயிர் தியாகத்திற்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனா். இதற்கிடையே பாகிஸ்தான் தரப்பில், இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒரு புறம் அமைதி பேச்சுவார்த்தை மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு தயார் என கூறும் பாகிஸ்தான், ஆயுதங்களை தயார்படுத்துவதுடன் இந்தியாவை மிரட்டி வருகிறது.
இந்தக் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி - வாகா எல்லை உடனடியாக மூடல், பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய விசா ரத்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைப்பு என 5 முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் மீது எடுத்துள்ளது.

இந்தியா. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது. அதில் ஒன்று இந்தியா உடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு. இதனால் அந்த நாட்டில் மருந்து விநியோக சங்கிலி பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் எடுத்த இந்த முடிவே தன்னை தானே பாதிக்கும் நிலையில் இருக்கிறது.
பாகிஸ்தானின் மருந்துத் துறையில் கடும் பாதிப்புகள் தோன்ற தொடங்கியுள்ளன. பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அவசரத் திட்டங்கள் மூலம் மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்க முயற்சி செய்கிறது.
இதையும் படிங்க: பாக். கட்டாயம் அனுபவிக்கும்.. தூங்குகிற புலியை இடரினால் இதுதான் கதி.. மதுரை ஆதினம் ஆவேசம்..!

பாகிஸ்தான் தமது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பியுள்ளது. இதில் ஆக்டிவ் பார்மாசூட்டிகல் இங்க்ரீடியண்ட்ஸ் (ஏபிஐ) மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும். ஆனால் இந்தியாவுடனான வர்த்தகம் திடீரென நிறுத்தப்பட்டதால், இந்த விநியோகச் சங்கிலி இப்போது சீர்குலைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் DRAP சீனா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிடமிருந்து மாற்று வழிகளைத் தேடுவதாக கூறப்படுகிறது.
ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள், பாம்பு விஷக்கடி எதிர்ப்பு, புற்றுநோய் சிகிச்சைகள், மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் பிற முக்கியமான உயிரியல் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.

DRAP சில எமர்ஜென்சி ரெடி உறுதிமொழிகளை அளித்த போதிலும், தொழில்துறையினரும் சுகாதார நிபுணர்களும் வரவிருக்கும் சவால் குறித்து எச்சரித்துள்ளனர். வர்த்தக இடைநீக்கத்தின் விளைவுகளை நிர்வகிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது நாட்டிற்கு ஒரு சிக்கலை உருவாக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா உடன் வர்த்தக முறிவு என அறிவித்துள்ள நிலையில் மருந்து விநியோகம் சார்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அந்த நாட்டில் இந்த துறை சார்ந்து இயங்கி வரும் வணிகர்கள், மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இதனால் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக கள்ளச்சந்தையில் தரமற்ற மருந்துகள் அண்டை நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் சூழல் உள்ளது. இந்த நிலையில் இந்தியா உடனான வர்த்தகத் தடையிலிருந்து மருந்து, மாத்திரைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கோரி இந்த துறை சார்ந்த தலைவர்கள் பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் 5,000 பாகிஸ்தானியர்கள்.. இன்றுடன் முடியும் கெடு.. உளவுத்துறை பட்டியல்..!