அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்ததாக அந்நாட்டின் பெடரல் (ரிசர்வ்) வங்கியுடன் மோதலைத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் கடனுக்கான வட்டியைக் குறைக்கக் கோரி, பெடரல் வங்கி தலைவரை அதிபர் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

ஒருவேளை பெடரல் வங்கி நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டியைக் குறைக்காவிட்டால், பெடரல் வங்கித் தலைவரை பதவியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறை பதவி ஏற்றதில் இருந்து அதிரடியாகவே பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். குடியேற்றச் சட்டம், வரிவிதிப்பு, நிதியுதவி என பல்வேறு பிரிவுகளில் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனால் ஒவ்வொரு தரப்பினும் அதிபர் ட்ரம்ப் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதையும் படிங்க: 1000 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து.. அதிபர் ட்ரம்ப் முடிவு..!
இந்நிலையில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த, கடனுக்கான வட்டியைக் குறைத்து, தொழில்தொடங்க அதிக கடனை வங்கிகள் வழங்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இது தொடர்பாக பெடரல் வங்கித் தலைவர் ஜெரோம் பாவெலிடம் பலமுறை வட்டிக் குறைப்பு குறித்து அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரோ விதிகளின்படிதான் நடக்க வேண்டும் எனக் கூறி வட்டியைக் குறைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அதிபர் ட்ரம்ப் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல குறைந்த வட்டியில் கடனுதவிதேவை. கடனுக்கான வட்டியைக் குறைக்கக் கோரி பலமுறை பெடரல் வங்கித் தலைவருக்கு தெரிவித்துள்ளேன். ஆனால், அவரோ வட்டியைக் குறைக்கவில்லை. நான் வேண்டும் என நினைத்தால் பெடரல் வங்கித் தலைவரை பதவியில் வைத்திருப்பேன், என் உத்தரவுக்கு பணியாவிட்டால், உண்மையாகவே அவரை பதவியிலிருந்து நீக்கிவிடுவேன்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பெடரல் வங்கி தலைவர் பாவெல் கூறுகையில் “எனக்கு 4 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. என் பதவிக்காலத்துக்கு முன்பாக நான் பதவிவிலமாட்டேன். என்னைப் பொருத்தவரை சட்டத்தின்படியும், வங்கியின் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவது எனது கடமை. யாருடைய நிர்பந்தத்துக்கும் பணியமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெடரல் வங்கி தலைவர் பாவெலுக்கும் இடையே மோதல் ஏற்படத்தொடங்கியுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் இடையிலான மோதல் அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு உயர்வால் வரும் காலங்களில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயரும்,பொருட்களின் விலை உயரக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் சட்டவல்லுநர்கள் தரப்பில் கூறுகையில் “பெடரல் வங்கியின் தலைவரை பதவி நீக்கம் செய்ய அதிபர் ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை. பெடரல் வங்கி தலைவர் மீது ஏதேனும் புகார் வந்தாலும் நாடாளுமன்றம்தான் விசாரிக்கும். பெடரல் வங்கி கட்டமைப்பு நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை, அரசியல் தலையீட்டிலிருந்து ஒதுங்கி இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பித்தம் தலைக்கு ஏறிய டிரம்ப்..! 245% வரி விதித்து சீனாவுக்கு அதிர்ச்சி..!