காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அக்ரன் என்ற பெயரில் இந்திய விமானப் படை சிறப்பு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் 4 நாட்களுக்கு முன்பே இந்தியாவில் தடை செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்திய அரசுக்கு எதிராகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோ வெளியிடக்கூடிய 16 பாகிஸ்தான் பின்னணி கொண்ட யூடியூப் சேனல்களுக்கு தற்போது தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் குறித்து தவறான தகவல்களை வீடியோக்களாக வெளியிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி சேனல்கள், விளையாட்டுத் தொடர்பான Dawn News, SAMAA TV, ARY NEWS, Geo News உள்ளிட்டவற்றின் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனலுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 3 ஆண்டு சிறை.. ரூ.3 லட்சம் வரை அபராதம்.. வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு தண்டனை..!

காஷ்மீர் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட பிசிசி நிறுவனம், பயங்கரவாதிகளை போராளிகள் அல்லது ஆயுதக்குழுக்கள் என பெயரிட்டு அழைத்தது சர்ச்சையானது. காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிபிசி கட்டுரையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பயங்கவாதிகள்/தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக போராளிகள் (Militants) என்று பிபிசி குறிப்பிட்டுள்ளது. பிபிசி செய்தி வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிபிசி இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு கடிதம் எழுதியது. இனிமேல் தாக்குதல் குறித்த பிபிசியின் செய்திகள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்து இந்தியாவின் கடும் அதிருப்தியை வெளியுறவு அமைச்சகம் பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்குத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், ‘காஷ்மீர் போராளிகளால் 24 டூரிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்' என தலைப்பிட்டது சர்ச்சையானது.
இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த செய்தியை இணைத்து வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல். அதில் எந்த குழப்பமும், மாற்றமும் இல்லை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரேலாக இருந்தாலும் சரி,பயங்கரவாதம் என வரும்போது நியூயார்க் டைம்ஸ் உண்மையில் இருந்து விலகி நிற்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

அந்த தலைப்பில் உள்ள ‘போராளிகள்’ என்ற வார்த்தையை அடித்துவிட்டு அதற்கு பதில் ‘பயங்கரவாதம்’ என குறிப்பிட்டதுடன், உங்கள் சார்பில் நாங்களே திருத்தம் செய்துவிட்டோம் என்றும் கூறி உள்ளது.அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் டேமி புரூஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் இறந்தோர் ஆன்மா சாந்தியடையவும், காயம் அடைந்தோர் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறோம்.
இந்த கடுமையான நேரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். இந்த கொடூர பயங்கரவாத செயலை கண்டிப்பதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ தெளிவுபடுத்தி உள்ளனர். காஷ்மீர் நிலைமையை நாங்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தியா – பாக்., இடையே நிலவி வரும் பதற்றம் குறித்து, இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்.. அசாம், திரிபுரா, மேகாலயாவில் 19 பேர் கைது..!