மத்திய சமூக நீதித்துறையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட “ஸ்மைல்” திட்டத்தின் கீழ் இதுவரை 9958 பிச்சைக்காரர்கள் 81 நகரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 970 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சமூக நலத்துறை சார்பில் விளிம்பு நிலையில் வாழும் நபர்களின் வாழ்வாதாரம் மற்றும் மறுவாழ்பு(smile) திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுவரை 9958 பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 970 பேருக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது, இதில் 352 குழந்தைகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘நம்முடைய தர்மம் குண்டர்களுக்கு பாடம் புகட்டுவதுதான்’.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சூசகம்..!
2022ம் ஆண்டு ஸ்மைல் திட்டம் தொடங்கப்பட்டது. பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் திருத்தி மறுவாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுவதாகும். இந்தத் திட்டத்தின் மற்றொரு பகுதி, திருநங்கைகளுக்கு அதிகாரமளித்தலாகும்.

இந்தத் திட்டத்தின் வழிகாட்டலின்படி, இந்தியாவை பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக்க வேண்டும் என்பதாகும். அதற்காக பிச்சைக்கார்கள் அதிகமாக இருக்கும் அடையாளம் காணப்பட்ட நகரங்களை, முக்கியமாக வழிபாட்டு தலங்கள் அதிகமிருக்கும் நகரங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வரலாற்று நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாததாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஸ்மைல் திட்டம் முதல்பகுதியாக 30 நகரங்களில் தொடங்கப்பட்டது. அதில் அயோத்தி, தரம்சாலா, அமிர்தசரஸ், கிர் சோம்நாத், கிரித், புது டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், நாக்பூர், கயா, லக்னெள, மதுரை, கொச்சி, ஜம்மு, ஸ்ரீநகர், ஜெய்சல்மாரில் தொடங்கப்பட்டது. 2வது கட்டத்தில் 50 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

சமூக நீதி அமைச்சகம் தனது 2024ம் ஆண்டுக்கான சமூக நல புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கையில் 2011ம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் கிராமப்புரங்களில் மட்டும் 6.62 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பிச்சை எடுப்பது, அல்லது தொண்டு நிறுவனத்தை நாடி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் இலக்காக 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2026ம் ஆண்டுக்குள் 8ஆயிரம் பேரை மறுவாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதாகும். மாநில அரசுகள் உதவியுடன், உள்ளாட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் பிச்சை எடுத்தலில் ஈடுபட்டுள்ள மக்களை அடையாளம் கண்டு கணக்கெடுப்பது, அவர்களின் மறுவாழ்வு, பின்னர் அவர்களின் விரிவான மீள்குடியேற்றம் ஆகியவை இதில் அடங்கும். இந்தத் திட்டத்துக்காக 2023-24 முதல் 2025-26ம் ஆண்டுவரை ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டு அறிக்கையின்படி இதுவரை சமூகநலத்துறை அமைச்சகம் ரூ.14.71 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காந்தி- நேருவை நினைத்துப் பாருங்கள்..! மோடிக்கு போன் போட்ட ஈரான் அதிபர்..!