1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது இந்திய அரசு. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள்.

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ரூபாய் குறியீடு எப்படி வேணா இருக்கலாம்.. தமிழ் குறியீடுக்கு ப.சிதம்பரம் சப்போர்ட்டு.!

ஒவ்வொரு ஆண்டும், விருது பெறுபவர்களை இந்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஒரு குழு தேர்ந்தெடுக்கிறது. இதில் உள்துறை செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நான்கு முதல் ஆறு முக்கிய நபர்கள் உள்ளனர். இந்தக் குழு தனது பரிந்துரைகளை பிரதமர் மற்றும் இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கிறது.

விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுபவர்களுக்கு ஜனாதிபதி கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் ஒரு பதக்கம் வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்களின் பெயர்கள் விழா நாளில் இந்திய அரசிதழில் வெளியிடப்படும்.
மிக உயரிய சிவில் விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் சடங்கு விழாக்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இனம், தொழில், பதவி, பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது. ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய விருதுகள் இணையதளமான https://awards.gov.in என்ற தளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விரிவான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in மற்றும் பத்ம விருதுகளுக்கான இணைய தளமான https://padmaawards.gov.in என்ற தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. விருதுகள் தொடர்பான விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெளிமாநிலங்களில் தேர்வு மையம்.. ரயில்வே துறைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!