பாதுகாப்புப் படை நடவடிக்கைகள், செயல்பாடுகளை நேரலை செய்வதிலிருந்து தவிருங்கள் என்று அனைத்து சேனல்களுக்கும், ஊடகங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சீடு நடத்தி 26 பேரைக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது, சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை உருவாக்கியது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீருக்கு வர இருந்த 80% சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு ரத்து..!
பாதுகாப்புப்படை நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தொடர்ந்து வழங்குகிறோம் என்ற அடிப்படையில் நேரலை செய்யும்போது, பாதுகாப்புப்படையின் நடவடிக்கைகளை தீவிரவாதிகள் அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிகளுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை நேரலை செய்வது, காட்சிகளை ஒளிபரப்புவது, பாதுகாப்புப்படை முகாமிட்டுள்ள இடத்திலிருந்து ரிப்போர்டிங் செய்வது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
“முக்கியமான தகவல்களை முன்கூட்டியே வெளியிடுவது எதிரிநாட்டு சக்திகளுக்கு உதவக்கூடும், பாதுகாப்புப்படையினர் செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும். கடந்த கால சம்பவங்கள் நடந்து கொண்டதுபோல் பொறுப்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அ ரசு கேட்டுக்கொண்டுள்ளது.

"தேசியப் பாதுகாப்பின் நலனைகருத்தில் கொண்டு, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகவியாளர்கள் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும்போது மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளது.
கார்கில் போர், 2011 மும்பை தீவிரவாத தாக்குதல், காந்தகார் விமானக் கடத்தல் ஆகியவற்றில் ஊடகங்கள் நேரலை செய்திகளை கட்டுபாடின்றி, பொறுப்பின்றி ஒளிபரப்பியதால், பாதகமான விளைவுகள்தான் தேசநலனுக்கு ஏற்பட்டது.
டிஜிட்டல் மீடியா தளங்கள், தனிநபர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் முக்கியமானவர்கள். சட்டப்பூர்வ கடமைகளைத் தவிர்த்து, நமது கூட்டு நடவடிக்கைகள் அல்லது நமது படைகளின் பாதுகாப்பையோ சமரசம் செய்யாமல் உறுதி செய்வது தார்மீகப் பொறுப்பாகும். இதற்கு முன்பு பல்வேறு காலகட்டங்களில் அனைத்து டிவி சேனல்களுக்கும் கேபிள்டிவி நெட்வொர்க் திருத்தச்சட்டம் 2021, விதி 6(1)ன் கீழ் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இந்த விதியின் கீழ், பாதுகாப்புப்படையினர் மேற்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது. அத்தகைய நடவடிக்கை முடியும் வரை, அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியால் செய்தி வெளியிடுதல், கட்டுப்படுத்தப்படும்.ஆதலால் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப்படையினர் நடவடிக்கைகளை செய்தி வெளியிடும்போதும், நேரலை செய்யும்போதும் அனைத்து சேனல்களும் தேசநலன், பாதுகாப்பைக் கருதி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்த சிக்கலில் இருட்டுக்கடை... உரிமை கோரும் சகோதரர்..!