உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெகு கோலாகலமாக நடந்து வருகிறது. ஜனவரி 13 ஆம் தேதி பிரயாக்ராஜ் நகரில் துவங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 தேதி வரை நடக்க உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா என்பதால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனர். திரிவேணியில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 55 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கும்பமேளா வர்த்தகம் 3 லட்சம் கோடியை எட்டும் என வர்த்தகர்கள் மகிழ்ச்சியாகதெரிவித்தனர்.

இதனிடையே கும்பமேளா நிறைவுபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மேலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கும்பமேளா நிகழ்வால் பிரயாக்ராஜ் முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் சாலை மார்க்கமாகவும், ரயிலிலும் லட்சக்கணக்கான மக்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் தீர்ந்த பாடில்லை.
இதையும் படிங்க: இனி கன்பார்ம் டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும்.. ரயில் பயணிகளுக்கு வந்த நல்ல செய்தி.!

அண்மையில் டெல்லியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் இருந்து திரும்பும் ரயில்களிலும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் ஏறிவருகிறது. சமீபத்தில் காசி தமிழ் சங்கம் சென்ற தமிழர்களின் சிறப்பு ரயிலில் சிலர் அத்துமீறி ஏறமுயன்ற சம்பவங்களும் அரங்கேறின. இதற்கிடையில் வாரணாசி ரயில் நிலையத்தில், பதிவு செய்த ரயிலில் ஏற முடியாமல் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 6 வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டி முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்காக வீரர்கள் ரயில் நிலையம் வந்துள்ளனர். ஆனால் வீரர்கள் பதிவு செய்த ரயிலில் ஏற முடியாமல், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் பதிவு செய்த இருக்கையில் பிறர் ஏறி ஆக்கிரமித்தனர். இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிரமமடைந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் தமிழகம் திரும்ப உதவி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் வாரணாசியில் சிக்கி தவித்த தமிழக வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்த 30 நிமிடத்தில் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. தங்களது கோரிக்கையை பரிசிலீத்த தமிழக அரசுக்கும், துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் மாற்றுத்திறனாளி வீரர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை..!