கர்நாடகா மாநிலம் குஷால்நகர், பசவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். 18 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகே என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நவம்பர் 2020 இல் மல்லிகே திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் இதுகுறித்து குஷால்நகர் கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மல்லிகேயைக் கண்டுபிடிக்க காவல் துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது. ஏழு மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2021 இல், பெரியபட்டணாவில் உள்ள பெட்டடபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இறந்த நிலையில் அழுகி எலும்பு கூடான ஒரு பெண்ணின் உடல் கிடைத்தது.

உடனே குஷால்நகருக்கு வந்து, தாங்கள் கண்டெடுத்த பெண்ணின் உடலை அடையாளம் காண சுரேஷை பெட்டடபுராவுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பெட்டடபுரா காவல் நிலையத்திற்கு வந்தபோது, அந்த பெண்ணின் எலும்புக்கூடு, உடைகள் மற்றும் செருப்புகள் ஆகியவற்றை காண்பித்து, இதுதான் அவரது மனைவி மல்லிகே என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை சுரேஷ் மறுத்துள்ளார்.
ஆனாலும் அது மல்லிகேயின் எலும்புக்கூடு என்று அடையாளம் காணும்படி சுரேஷ் கட்டாயப்படுத்தப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து FIR பதிவு செய்யப்பட்டு சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: டீசலுக்கான விற்பனை வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு.. கர்நாடக அரசு அமல்..!

சுரேஷின் வழக்கை எடுத்துக் கொண்ட வக்கீல் பாண்டு பூஜாரி, மல்லிகேயின் எலும்புக்கூடு என கண்டு எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டை, அவரது தாயின் டி.என்.ஏவுடன் பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறு நீதிமன்றத்தைக் கேட்டு கொண்டார். நீதிமன்றம் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டது. டிஎன்ஏ சோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தது. இந்த எலும்புக்கூடு மல்லிகேயின் எலும்புக்கூடு அல்ல என கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. எனினும் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது சுரேஷ் இரண்டு ஆண்டுகள் சிறையில் தான் இருந்தார்.

இறுதியில் வழக்கறிஞர் பாண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகுதான், கடந்த ஆண்டு சுரேஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, சுரேஷும் அவரது நண்பர்களும் மடிகேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, தனது மனைவி போல் உருவம் உள்ள ஒரு பெண்ணை பார்த்துள்ளார் சுரேஷ். உடனே அது தனது மனைவி தான் அடையாளம் கண்டுகொண்டார். சுரேஷ் உடனடியாக மடிக்கேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார், அவர்கள் ஹோட்டலுக்கு வந்து உயிருடன் இருக்கும் மல்லிகேயை கைது செய்தனர்.

விசாரணையின் போது, மல்லிகே தனது கள்ளக்காதலன் கணேஷுடன் விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ள ஷெட்டிகேரி கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்த்துள்ளார். பின்னர், மடிகேரி போலீசார் மல்லிகேவை குஷால்நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மைசூருவில் உள்ள 5வது ஜேஎம்எஃப்சி நீதிமன்றம் எஸ்.பி., குஷால்நகர் போலீசார் மற்றும் மல்லிகே ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. ஏப்ரல் 17க்குள் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

நான் செய்யாத குற்றத்திற்காக போலீசார்கள் என்னை அடித்தார்கள், அவமானப்படுத்தினார்கள், தண்டித்தார்கள் என சுரேஷ் கண்ணீர் மல்க கூறினார். என் குழந்தைகளின் படிப்பு கூட பாதிக்கப்பட்டது. இந்த வலியை நான் யாருக்கும் ஏற்படுத்த விரும்பவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை போலீசார் மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன் என சுரேஷ் தெரிவித்தார்.
மனைவியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடிக்கப்பட்ட கணவனே, ஜாமினின் வெளியே வந்து, மனைவியை கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் திடீர் விரிசல்..பதறும் டெல்லி மேலிடம்!