என்எல்சி நிறுவனத்தில் நடந்த தொழிற்சங்க தேர்தலில் திமுகவின் தொமுச மற்றும் அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக தேர்வாகியுள்ளது.
நெய்வேலி என்எல்சி-யில் சுமார் 12,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ, விசிக, பாமக, தவெக உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், சிஐடியு, திராவிட தொழிலாளர் சங்கம், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், மஸ்தூர் சங்கம், பாட்டாளி மக்கள் சங்கம், தொமுச ஆகிய ஆறு சங்கங்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டன.

திமுக கூட்டணியில் சிபிஎம் தவிர்த்து காங்கிரஸ், விசிக, தவாக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொமுசவுக்கு ஆதரவு அளித்தன. கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவின் அதொமுசவும், பாஜகவின் மஸ்தூர் சங்கமும் இந்த தேர்தலில் தனித்து களம் கண்டனர்.
இதையும் படிங்க: மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு.. ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
திமுக தரப்பில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்எல்ஏ சபா ராஜேந்திரன், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், செம்மலை, எம்.சி.சம்பத், சிபிஎம் தரப்பில் சு.வெங்கடேசன் எம்.பி, மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற தொமுச, அதொமுச, சிஐடியு ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.மொத்தம் 6,800 வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவானது 9 இடங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 6 தொழிற் சங்கங்கள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் மொத்தம் 6137 பேர் வாக்களித்தனர். மொத்தத்தில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் திமுகவின் தொமுச 2507 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 1389 வாக்குகள் பெற்று என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகாரம் பெற்றது.

இத்தேர்தலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக இருக்கும். சிங்கிள் மெஜாரிட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் 51 சதவிகிதம் வாக்குகள் பெற வேண்டும். ஒருவேளை 51 சதவிதம் வாக்குகள் பெற முடியாமல் போனால், அடுத்த இடத்தில் வரக்கூடிய சங்கங்கள் அங்கீகரிக்கப்படும் இந்த தொழிற்சங்கங்களே என்எல்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

ஆகையால் திமுக தொமுச வெற்றிபெற்றபோதும் சிங்கிள் மெஜாரிட்டியில் வெற்றிபெறதேவையான 51 சதவிகித வெற்றியை பெற முடியவில்லை. ஆகவே அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 1389 வாக்குகள் பெற்று என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகாரம் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்க தேர்தல் நடத்தப்படும்.
இதையும் படிங்க: சாப்பாடு போட்டு.. அதிமுக எம்எல்ஏ-க்களின் 'இலை'க்கு அடியில் வேட்டு வைத்த இ.பி.எஸ்..!