அதிமுக., எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு சைவ, அசைவ உணவுகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளித்தார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை அதிமுக எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்தில், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகிய 7 வகையான அசைவ உணவுகளும், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம், பொரியல், அவியல் என சைவ உணவுகளும் இடம் பெற்றிருந்தன.

பல வகையான விருந்தோடு தற்போது அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருக்கும் முக்கால்வாசி பேருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கப் போவதில்லை என்கிற கசப்பான உணவையும் பந்தி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.
இதையும் படிங்க: அடிச்சு தூக்கு..! 2026 நம்ம காலம்.. மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் கொடுத்த உத்வேகம்..!
எடப்பாடி பழனிசாமி வரலாறு தன்னை திரும்பி பாக்க வேண்டும் என மிகவும் ஆசை கொண்டவர். அதன் முதற்கட்டம்தான் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடபுடல் விருந்து. எம்.ஜி.ஆர் அவரது காலத்தில் இப்படித்தான் கன்னிமாரா ஓட்டலில் எம்எல்ஏக்களுக்கு விருந்து வைத்தாராம். அதேபோல மாமல்லபுரத்தில் ஸ்டார் ஓட்டலில் ஜெயலலிதாவும் விருந்து வைத்ததுடன், விலை உயர்ந்த சூட்கேஸ் வழங்கினார். மூன்றாவது தலைமுறையாக ஆட்சி செய்ததுடன், கட்சியையும் தன்னகத்தே கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியும் அதை பின்பற்றி நடப்பதை ஊருக்கு சொல்லத்தான் இந்த சிறப்பு விருந்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது,

ஆனால் அவர் இதில் கூடுதலாக எடப்பாடி பழனிசாமி சொல்ல வேறொரு விஷயமும் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுகவில் 65 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசி பேருக்கு மேல் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டிப்போட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறு யாருக்கும் மீண்டும் போட்டியிட சீட் கொடுக்கக்கூடாது என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும் முப்பது ‘சி’யை தண்ணீராக செலவிட தகுதி இருப்பவர்களுக்கு மட்டும்தான் மீண்டும் சீட்டு என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களின் பயோடேட்டாவை அலசி ஆராய்ந்து எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பட்டியலை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு விருந்து என்ற புதிய உற்சாகம் கலந்த கசப்பான உணவை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.

மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும். அதற்கு நீங்கள் எல்லோரும் தீயாய் வேலை பார்க்க வேண்டும். எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படக்கூடாது. நினைத்துப் பார்க்க முடியாத அளவில் செய்வேன்னு உற்சாகப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர்களின் அலைபாயும் மனதை அடக்கி ஐஸ் வைக்கத்தான் இந்த விருந்து விவகாரம் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் இந்தத் திட்டத்தை தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்கள் ''தங்களுக்கென ஒரு பாதை கிடைக்காமலா போய்விடும்'' என்கிற யோசனையில் மூழ்கி சீட் கிடைக்கும் வழியை தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..! மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை..!