கடந்த டிசம்பர் 28-ந் தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் வெடித்தது. மகள்வழி பேரனான முகுந்தனை கட்சியின் இளைஞரணித் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அறிவிக்க மேடையிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி.
கட்சிக்குள் வந்து 4 மாதங்கள் மட்டுமே ஆன ஒருவருக்கு இளைஞரணித் தலைவர் பதவியை தருவதா என அன்புமணி கேள்வி எழுப்பினார். இது நான் உருவாக்கிய கட்சி, யாருக்கு என்ன பொறுப்பு தரவேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன், இஷ்டம் இருப்பவர்கள் இருக்கலாம், மறுப்பு தெரிவிப்பவர்கள் வெளியேறலாம் என மருத்துவர் ராமதாஸ் காட்டமாக கூறினார்.

உடனடியாக மைக்கைப் பிடித்த அன்புமணி, தான் பனையூரில் தனியாக ஒரு அலுவலகம் திறந்திருப்பதாகவும் பாமக நிர்வாகிகள் தன்னை அங்கு வந்து சந்திக்கும்படியும் அறிவிப்பு வெளியிட்டார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் என்பது மருத்துவர் ராமதாசின் வீடு. பாமகவின் அனைத்து முக்கிய முடிவுகளும் அங்குதான் எடுக்கப்படும். பாமகவின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்ட பின்னரும் தனக்கென தனியாக அலுவலகம் வைத்துக் கொள்ளாமல் தைலாபுரத்தில் இருந்தே செயல்பட்டு வந்தார்.
இதையும் படிங்க: மகன் தலைவர், பேரன் இளைஞரணித் தலைவர்..இது குடும்ப கட்சி இல்லையா மருத்துவர் ராமதாஸ் அவர்களே...!
உட்கட்சி மோதல் வெடித்த நிலையில், தனக்கென ஒரு அலுவலகத்தை பனையூரில் அதிரடியாக திறந்த அன்புமணி, தொடர்ச்சியாக பாமக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கட்சியை அடிமட்ட அளவில் மேம்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணங்கள் ஆகியவை குறித்து நுட்பமாக கேட்டறிந்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை பலப்படுத்துவது என்பதை அளவுகோலாக கொண்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக பங்கேற்ற நிர்வாகிகள் கூறுகின்றனர்.
காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் என அடுத்தடுத்து மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி நான்காவது நாளில் ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த தேர்தலில் தர்மபுரி தேர்தலில் களம் கண்ட தனது மனைவி சௌமியா அன்புமணியை தீவிர அரசியலில் இறக்குவது குறித்தும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்ஒருபகுதியாகவே சென்னை அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாமக மகளிரணி சார்பில் சௌமியா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டதை பார்ப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம் தான் எடுத்த முடிவு சரி என்றும் பாமக இளைஞரணித் தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டது, நியமிக்கப்பட்டது தான் என்றும் மருத்துவர் ராமதாஸ் தெளிவுபடுத்தி விட்டார். அன்புமணியோ நிர்வாகிகளுடன் தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். பாமக கட்சியினர் தான் இப்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தந்தையா? தனயனா? என்ற மோதலில் கட்சி உடைந்து விடக் கூடாது என்பதே அவர்களின் கவலையாக உள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு 1000 ரூபாய் வேண்டாம்; பாதுகாப்பு தான் வேண்டும்... சௌமியா அன்புமணி ஆவேசம்