கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஓ.பி.எஸ், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே உறுதியா சொல்லி வந்தார். ஆனால் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய எடப்பாடி பழனிசாமி கடந்த தேர்தலை தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சந்தித்தார். அப்போது கூட பாஜக கட்சியுடன்தான் ஓபிஎஸ் நின்றார். தங்களை நம்பி வந்த ஓ.பி.எஸை நட்டாற்றில் விடுவதற்கு பாஜகவுக்கு மனமில்லை.

இதனால எப்படியாவது ஓ.பி.எஸை அதிமுகவில் சேர்த்து வைக்க முயற்சிகளை டெல்லி மேற்கொண்டது. ஆனால் அதுமட்டும் நடக்கவே நடக்காது என எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். ஆனாலும் ஓ.பி.எஸ்., டிடிவி.தினகரன் சசிகலாவை அதிமுகவில் எப்படியாவது ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக தலைமை செங்கோட்டையன் உட்பட பல அஸ்திரங்களை ஏவிப்பார்த்தது. ஆனாலும், இதில் எடப்பாடி பழனிசாமி விடாப்பிடி காட்டியதால் வேறு வழியின்றி ' அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்'' எனக் கூறி கூட்டணிக்கு பாஜக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. அதிமுக - பாஜக கூட்டணியை சிலாகிக்கும் ஜி.கே. வாசன்.!!

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடைசி கபட நாடகத்தை பாஜக மேலிடம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. இரட்டை இலை சின்னத்தை கைக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் எடப்பாடி பழனிசாமி செல்வார். அதனால்தான் தற்போது கூட்டணிக்கு எடப்பாடி அரைகுறை மனதுடன் ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் சின்னம் கைக்கு வந்தவுடன் அவரது அரசியல் ஆட்டம் தெரிய வரும் என்கிறார்கள் ஓ.பி.எஸ்.தரப்பினர். கடந்த நாடாளுமகன்றத் தேர்தலில் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு பிரதமர் மோடிக்கு அருகில் நின்று போஸ் கொடுத்துவிட்டு அந்த போட்டோ பிரிண்ட் வெளியாவதற்கு முன்பே கூட்டணி இல்லை என அறிவித்தவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்பதையும் கோடிட்டு காட்டுகிறது ஓ.பி.எஸ் தரப்பு.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விமர்சித்துள்ள பத்திரிகையாளரும், அரசியல்வாதியுமான மருது அழகுராஜ், ''கட்டாயக் கல்யாணம் பல பூச்சாண்டிகளை காட்டி, விருப்பமில்லாத பெண்ணை வற்புறுத்தி வரவழைத்து, ஒருவழியா நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. பெண்ணோட முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஆனாலும், முகூர்த்தத்துக்கு இன்னும் 10 மாதம் இருக்கு.. ஏற்கனவே வலப் பக்கத்தில் அமர்ந்து விட்டு தப்பி ஓடி வந்துவிட்ட அனுபவம் அந்த பெண்ணுக்கு உண்டு. (எடப்பாடி பழனிசாமி தரப்பு).

இந்த வரலாறு தெரிந்த மாப்பிள்ளை வீட்டாரும் (பாஜக), ரொம்ப முரண்டு பிடிச்சா பெண் வீட்டிலுள்ள இன்னொரு பெண்ணையும் (செங்கோட்டையன்) ரகசியமா தேர்வு செய்து வச்சிருக்காக. ஆக மொத்தத்தில், கட்டாய கல்யாணம் நடக்குமா..? இல்லை கடந்த காலத்தை போல நிச்சயதார்த்தத்தோடு நின்னு போய்டுமா? என்னும் குழப்பம் இருதரப்புலயும் நீடிக்குது...

தங்களை நம்பி வந்த எ.வ.வேலு, முத்துச்சாமி, சேகர்பாபு, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் கே கே.எஸ்.எஸ். ஆர்., செந்தில்பாலாஜி இப்படி யாரையும் திமுக கைவிட்டதில்லை. அதே போல தங்கள் கூட்டணிக்கு நம்பி வந்த காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட்டுகள் என எந்தக் கட்சியையும் திமுக கைவிட்டதுமில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் வழியெங்கும் துரோகம் என்றால், அதே போல் சிவசேனா தொடங்கி கர்னாடகாவில் குமாரசாமி பாண்டிச்சேரியில் நாராயணசாமி வரை பாஜகவின் வரலாறும் துரோகம் என்றிருக்கையில் திமுக வின் நம்பகத்தன்மையை அரசியல் கடந்து மதிக்கத் தான் தோன்றுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொன்முடியின் ஆபாச பேச்சு.. முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.. பொசுக்குன்னு சொன்ன பிரேமலதா!