பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை விரைவில் மாற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் மே மாதத்தின் தொடக்கத்தில் அல்லது ஜூன் மாதத்தில் இருக்கலாம் என்று தெரிகிறது.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்தித்து நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜகவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் நடந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: புனிதமான அரசிலமைப்புச் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தும் காங்கிரஸ்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!
பாஜகவின் மூத்த தலைவர்கள் மத்தியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எது குறித்து பேசப்பட்டது என்பது தெரியவில்லை. மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முர்ஷிதாபாத் வன்முறை, வக்ஃபு சட்டத்தில் உள்ள சவால்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம்.
அது மட்டுமில்லாமல் இந்த வாரத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஏதும் நடைபெறாதவு என்று நேற்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதனால் அமைச்சரவையில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சர்களில் தமிழகத்தில் இருந்து ஒருவருக்கும், தேர்தல் நடக்க இருக்கும் பீகார் மாநிலத்தில் இருந்து ஒருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தி நியூ இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது சொல்வது கடினம் ஆனால் ஏதோ ஒன்று நிச்சயம் நடக்கும். தேசியத் தலைவர் ஜேபி நட்டா வீட்டில் மூத்த தலைவர்கள் அனைவரும் கூடி ஆலோசிப்பது இயல்பான விஷயம் அல்ல. ஏதோ முக்கியமான விஷயம் நடக்கப் போகிறது என்பதைத்தான் குறிக்கிறது” எனத் தெரிவித்தார்.
தற்போது அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் நீக்கப்படலாம், குறிப்பாக அவர்களின் வயது மூப்பு, திறமையின்மை, நிர்வாகமின்மை ஆகியவற்றால் நீக்கப்படலாம். அல்லது பீகார் தேர்தலுக்காக கட்சிப்பணிக்கு செல்லக் கோரி நீக்கப்படலாம். பாஜக கூட்டணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கூட்டணிக் கட்சிக்கு ஏதேனும் அமைச்சர் பதவி தரப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வரும் 19ம் தேதிக்குள் ஏதேனும் அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “தமிழக பாஜக த லைவராக இருந்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம். ஏற்கெனவே சிவில் சர்வீஸ் பணியில் இருந்ததால், அவருக்கு எந்த அமைச்சக பணி வழங்கினாலும் அதை சிறப்பாக செய்யக்கூடியவர். கட்சித் தலைமை மற்றும் புத்திசாலித்தனமான நிர்வாகம், தேர்தல் வியூகங்களை அமைப்பது ஆகியவற்றில் சிறப்பானவர். தமிழகத்தில் பாஜகவுக்கு தேர்தலில் சில இடங்களை வெல்ல முடிந்தது அண்ணாமலையால்தான்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே வக்ஃபு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சட்டத்தில் இருக்கும் சவால்கள், சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பது குறித்து பாஜக உயர்தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!