கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இரண்டு நாட்களுக்கு நடக்கும் இந்த மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ்கனி, ஈஸ்வரசாமி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, திமுக மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி பேசிய போது பேசும்போது, தேர்தல் வெற்றி, கட்சி பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் எனக்கு கிடைத்தாலும், என் வீட்டில் அனைவரும் திமுக. என் மகள் மட்டும் திக என கலைஞர் கூறியதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். உலகில் அழகான வீரியமிக்க வார்த்தை சுயமரியாதை. மனித வாழ்க்கையின் அடிப்படை கோட்பாடு சுயமரியாதை. அந்த சுயமரியாதை உணர்வை கட்டமைத்து தந்த இயக்கம் திராவிடர் இயக்கம். பல நாடுகளில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதில் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு தவிர மற்றவற்றை மாற்றி விட முடியும். ஆனால் ஒருவர் பிறப்பதற்கு முன்பிருந்து இறந்த பின்னாலும் தொடரும் சாதியை மாற்ற முடியாது. யார் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்காக வாழ்நாள் முழுக்க போராடியவர் பெரியார்.

திமுக இந்து மக்களுக்கு எதிரானது என சிலர் சொல்கிறார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. பெரும்பான்மையான அரசு பொறுப்புகளில் 3 சதவீதம் மட்டுமே இருக்கும் பிராமணர்கள் இருந்த நிலையை மாற்றி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அப்பணிகளில் தற்போது கோலோச்ச காரணம் திராவிடர் இயக்கம். எதையும் கேள்வி கேட்காதே என பெண்களிடமும், ஒடுக்கப்பட்ட மக்களிடமும் பாசிசம் சொல்லி கொண்டே இருக்கிறது.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு துரோகம்.. அதிமுகவை ரவுண்டு கட்டிய கனிமொழி.!
முதலமைச்சர் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்பதால் தான், அவரை பார்த்தாலே சிலர் கொஞ்சம் நடுங்குகிறார்கள். கேள்வி கேட்பவர்களை நக்சல், தேச துரோகி என்கிறார்கள். ஆனால் மீதான அக்கறையின் பேரில் தான் முதலமைச்சர் கேள்வி கேட்கிறார். ஆளுநர் தேவையில்லை என பல காலமாக சொல்லி கொண்டு இருக்கிறோம். இப்போது சுப்ரீம் கோர்ட்டை கேட்க வைத்த இயக்கமாக திமுக இருக்கிறது. நமது வரலாற்றை நமக்கு கிடைத்த உரிமைகளை அடுத்த தலைமுறைக்கு சொல்லி தர வேண்டும்.

பெண் விடுதலையை மறுப்பவர்கள் யாரும் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது. பெண்ணை இழிவுபடுத்தும் கூடியவர், ஒரு பெண்ணை மேடையில் கேலி பேசி தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தக் கூடியவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது. அவர் பெரியார் வழியில் வந்தவனாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் மட்டும் தான் பெயருக்கு பின்னால் சாதி வால் இருக்காது. தற்போது தவறான அரசியலால் மீண்டும் தலைதூக்கும் சாதி வாலை வெட்ட வேண்டும்.

மத துவேஷத்தை உருவாக்குபவர்கள் கையில் டெல்லி ஆட்சி இருக்கிறது. ஒவ்வொரு மாசோதாவிலும் மாநில உரிமைகளை பறிக்கிறார்கள். இந்த சக்திகள் ஊடுருவாமல் நாட்டை காக்க வேண்டியது நம் கடமை. இந்தியை திணிப்பது அறிவியலுக்கு உகந்ததாக இல்லை. ஏஐ தொழில்நுட்பத்தால் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தி படி என்பது, சுமையாக தான் இருக்கும். நூறு வருடங்களுக்கு முன்பு போட்டு முடித்த சண்டையை மீண்டும் போடுகிறார்கள். அவர்களை இந்த மண்ணில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும் என தெரிவித்தார் . திமுக அமைச்சர் பொன்முடி விலைமாது குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், சொந்தக்கட்சிக்காரர்களையே திமுக எம்.பி.கனிமொழி வெளுத்து வாங்கியுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் மௌனிக்கிறது..? மக்களவையில் கொந்தளித்த கனிமொழி, டி.ஆர்.பாலு..!