முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே 5 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு, செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் செந்தில் பாலாஜியிடம் அமைச்சராக தொடர வேண்டுமா? ஜாமீனில் வெளியே இருக்க வேண்டுமா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என நீதிமன்றம் கறாராக கூறி 28ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. எனவே அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதை தர்மசங்கடமாக முதல்வர்வர் உணர்வதால் செந்தில் பாலாஜி தாமாகவே அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் தொடர் சர்ச்சைப் பேச்சுக்களில் சிக்கிய அமைச்சர் பொன்முடி சைவ-வைணவ பேச்சால் கட்சிப்பதவியை இழந்தார். உயர்நீதிமன்றமும் கடுமை காட்டியதால் பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, ‘கட்சிப் பதவியும் இல்லாமல், அமைச்சர் பதவியும் இல்லாமல் இருந்தால் மரியாதையாக இருக்காது.சட்டமன்ற கொறடா பதவியாவது கொடுங்கள் எனக் கேட்டு வருகிறார் பொன்முடி.
இதையும் படிங்க: உதயநிதி அமைச்சரவையில் துரைமுருகன்.. திமுக எம்.எல்.ஏ. பேச்சால் கலகலப்பான சட்டமன்றம்.!

இருவரது அமைச்சர் பதவிகளும் காலியாவதாக் அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்களா? அல்லது பிற அமைச்சர்களிடம் இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்படுமா? என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. தனக்கு அதிகாரமும் இல்லை, நிதியும் இல்லை என்று அண்மையில் சட்டமன்றத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத் துறையை வழங்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு பதிலாக கொங்கு மண்டலத்தில் இருந்தே ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவுக்கு மின்சாரத் துறை செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

அமலாக்கத்துறை புலனாய்வு அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் துறையை எந்த அமைச்சரும் விரும்பவில்லை என்கிறார்கள். துரைமுருகனின் நிலைமை சட்டத்தின் பிடியில் இருப்பதால் அவரது கனிமவளதுறை இலாகா மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சக்கரபாணிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
செந்தில்பாலாஜியிடம் இருக்கும் டாஸ்மாக் துறை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வெள்ளக்கோவில் சுவாமிநாதனிடம் கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட அமைச்சராக தற்போது இருக்கும் பொன்முடியின் இலாகாவை பறித்தால் அம்மாவட்டத்துக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்கிற அடிப்படையில் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன், விழுப்புரம் லட்சுமணன் ஆகியோரில் ஒருவருக்கு பதவி நிச்சயம் என்கிறார்கள்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வளமான துறை எதுவும் இல்லாத நிலையில் வனத்துறை அவருக்கு அளிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!