பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் ரீதியிலான உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22இல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 27 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் உடனான தூதரக சேவைகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதே போல் பாகிஸ்தான் அரசும் சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் கேப்டனுமான கங்குலி, தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கருத்தைப் பகிர்ந்துள்ளார். “பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் ரீதியான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும். அது ஐசிசி தொடர்கள் என்றாலும் சரி. நூறு சதவிதம் இதை செய்தே வேண்டும். இது மாதிரியான கடுமையான நடவடிக்கை அவசியம் தேவை. ஆண்டுதோறும் இது மாதிரியான தாக்குதல் நடக்கிறது. தீவிரவாதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்யவும் கூடாது. நாம்தான் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, நாம்தான் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். நமது அரசு சொல்வதை நாம் செய்வோம்.
இதையும் படிங்க: இந்தியா வேட்டையாடினால்... ராணுவம் ஒளிந்துகொள்ள பாகிஸ்தான் அமைத்த 50 பதுங்கு குழிகள்..!

அரசின் நிலைபாடு காரணமாகத்தான் ஏற்கனவே பாகிஸ்தான் உடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் நாம் விளையாடுவது இல்லை. வரும் நாட்களிலும் அது நடக்காது. ஆனால், ஐசிசி உடனான உடன்படிக்கை காரணமாக இந்தியா, ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது. ஐசிசிக்கு இங்கு என்ன நடக்கிறது என தெரியும்” என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 48 மணி நேரம்தான்.. இந்தியா வந்திறங்கிய இஸ்ரேல் படை.. பாகிஸ்தானுக்கு கை கொடுக்கும் சீனா..!