பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் பட்ஜெட் அறிவிப்பில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி அடுத்தகட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருட்டு மாடல் கிளப்பும் பிரச்சினை.. கோமாளித்தனத்துக்கு அளவே இல்லையா.? மு.க.ஸ்டாலின் மீது ஹெச்.ராஜா ஆவேச அட்டாக்.!

இதன்படி ஜாக்டோ- ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டமாகும். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனத்தில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை. ஆனால், வெற்று விளம்பர மாடல் திமுக அரசு செய்ய முன்வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஏளனம் என்று வார்த்தையை விட்ட நிர்மலா சீதாராமன்.. எள்ளி நகையாடுவதா என்று கொந்தளிக்கும் கனிமொழி.!!