தமிழகத்தில் உள்ள பல்வேறு மலைப்பகுதிகள் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மக்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் சாலை அமைப்பது, மின்சாரம் வழங்குவது போன்றவை சிரமமான காரியமாக அமைகிறது. குறிப்பாக வன விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக சாலை வசதிகள் பெரிய அளவில் அமைக்கப்படாமலேயே உள்ளது. இவ்வாறான ஒரு பகுதி தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி வெள்ளகவி ஊராட்சி. இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மலை கிராமம் ஆகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்டு சின்னூர், பெரியூர்,சின்னூர் காலனி என மொத்தம் ஐந்து கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களுக்கு செல்ல மஞ்சளாறு அணை வழியாகத்தான் செல்ல முடியும். சுமார் 15 கிலோ மீட்டர் ஒத்தையடி பாதை வழியாக சென்றால் தான் வெளியூர்களுக்கு செல்ல முடியும் என்கிற நிலை தற்போதும் தொடர்கிறது. எனவே இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென்று கேட்டு இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 2021ல் கிராம மக்களின் 50 ஆண்டு கோரிக்கை ஏற்று கொடைக்கானல் ஆர்.டி.ஓ.,வாக இருந்த முருகேசன் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் ரோடு அமைக்க உத்தரவிட்டார். ஆனால் அந்த பணி முடியவில்லை. ரோடு அமைக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதி அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அவை அனைவரும் மறந்து விடுகின்றனர்.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்பவர்களே... ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு...!


சாலை வசதி இல்லாததால் கிராம மக்களின் துயரம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கிராமங்களில் உடல்நிலை சரியில்லாத நபர்களை டோலி கட்டி தூக்கி சுமந்து நடந்து வந்து பெரியகுளம் கொண்டு வர வேண்டிய அவல நிலை உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நபர்கள் உடனடியாக சிகிச்சை கிடைக்காமல் இறந்து போவதும் வாடிக்கையாகிறாது. அந்த வகையில் வெள்ளகெவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் மனைவி மணிமேகலை (வயது 33) என்ற பெண்ணிற்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இரத்த அழுத்தம் குறைந்த நிலையில் அப்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார்.

அடிப்படை மருத்துவத்திற்கு கூட வழியில்லாத நிலையில் அங்குள்ள மலைக்கிராம மக்கள் டோலி கட்டி பாதிக்கப்பட்ட மணிமேகலையை இரவு நேரத்தில் மலைகளை கடந்து சுமந்து வந்தனர். கிராமத்தினர் டோலி கட்டி 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பக்கரை பகுதிக்கு தூக்கி சென்று அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரது உடல்நிலையை பரிசோதித் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து இறந்தவர் உடலை மீண்டும் பல கிலோ மீட்டர் தூக்கி சுமந்து வெள்ளகெவி மலை கிராமத்திற்கு சுமந்து செல்வது இயலாத காரியம் என்பதால், பெரியகுளம் நகராட்சி மின் மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்தனர். இது போன்ற இறப்புகள் தொடரக்கூடாது என்பதற்காகவும், தங்களின் வாழ்வு செழிக்க வேண்டியும், தங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு... இன்றும் நாளையும் இங்கு செல்ல தடை விதிப்பு...!