மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக் கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கில், அரசு மருத்துவர்கள் நியமனம், இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம், கடந்த ஜனவரி 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து, 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதையும் படிங்க: 3 மாதம் தான் கெடு... அதுக்குள்ள முடிக்கல, அவ்வளவுதான்.. அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்...!
இந்த பட்டியலில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில், 2024 ஜூலை 15ம் தேதிக்கு முன் பதிவு செய்யவில்லை எனக் கூறி, 400 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதை எதிர்த்து மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுக்களில், 2024 ஜூலை 15ம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தும், பதிவு செய்யப்படாத நிலையில், தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து அரசு உதவி மருத்துவர் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவ பல்கலைக்கழகம், சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்ததால், நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற முடியதாதற்கு பல்கலைக்கழகம் தான் காரணம் என்பதால், தங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், இறுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணை வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, மனுதாரர்களும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தான். சான்றிதழ் சரி பார்ப்புக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு இருந்தால் போதுமானது எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிப்ரவரி 26 ம் தேதி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளதாக வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பணி நியமன உத்தரவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: வழிப்பறி வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்.. ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு...!