அமெரிக்காவை தளமாக கொண்ட, 500 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக வலை பின்னல்களில் ஒன்று ட்விட்டர். நேரடியாக செய்திகள் அனுப்புதல், ஒலி அழைப்பு உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளை கொண்ட மிகப்பெரிய நிறுவனம் இது. இந்த நிறுவனம் 2006 ஆம் ஆண்டு ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது. அப்போது, நிறுவனத்தின் லோகோ எனப்படும் இலச்சினையாக பறவையின் வடிவம் தேர்வு செய்யப்பட்டது.

அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டில் நீல நிறப் பறவையாக லோகோ நவீனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத் தலைவருமான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை 2022 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியதுடன் அதன் பெயரையும் லோகோவையும் மாற்றியமைத்தார்.
இதையும் படிங்க: வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.. விண்வெளி வீரர்களை மீட்ட மகிழ்ச்சியில் அமெரிக்க வெள்ளை மாளிகை..!

டிவிட்டர் என்ற பெயரை நீக்கி எக்ஸ் என பெயரிட்டார். அதுமட்டுமல்லாது, X என லோகோவையும் மாற்றியமைத்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையக கட்டடத்தில் பறவை லோகோவை அப்புறப்படுத்தி 'எக்ஸ்' லோகோவை நிறுவினார்.

தற்போது, எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸின் மதிப்பு மீண்டும் 44 பில்லியன் டாலர்கள் என்ற நிலையை அடைந்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு எக்ஸ் நிறுவனத்தின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டிவிட்டரின் பறவை லோகோ ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டாலர் அதாவது ரூ. 18.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஏலம் எடுப்பவர்கள் லோகோவை கொண்டுச் செல்பவர்கள் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், 254 கிலோ எடை, 12 அடி நீளம், 9 அடி அகலம் கொண்ட டிவிட்டர் பறவை சின்னத்தின் போர்டு, 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக அரிய பொருட்களை ஏலம் விடும் ஆர்.ஆர்., என்ற ஏல நிறுவனம் அறிவித்துள்ளது. என்ன தான் இருந்தாலும் மக்களின் மனதில் டிவிட்டர் என்ற பெயர் கொண்ட நிறுவனமும் நீல நிறப் பறவையும் நீங்காத இடத்தை பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதையும் படிங்க: உலகமே காத்திருந்த தருணம்.. சுனிதா வில்லியம்ஸ் ரிட்டன்ஸ்..! திக்.. திக்.. நிமிடங்கள்..!