உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொடர்பு கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட டெலிபோன், செல்லும் இடம் எல்லாம் பேசுவதற்காக செல்போனாக மாறியது. பின்னர் அது டச் போன், ஸ்மார்ட் போன் என தன்னை தொடர்ந்து அட்டேட் செய்து கொண்டே வருகிறது. இவ்வாறாக தொடர்ந்து போன்கள் அப்டேட் ஆகிவர அதனால் மேற்கொள்ளப்படும் குற்றங்களும் மறுபக்கம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. கேமிரா போன்கள் வந்ததும் பெண்கள் மறைந்திருந்து எடுக்கப்படும் புகைப்படங்களால் பாதிக்கப்பட்டனர். வீடியோ கேமிராக்களால் அந்தரங்க படங்கள் அதிகம் வெளியாயின. ஆனாலும் செல்போன் பயன்பாட்டை மக்கள் யாரும் குறைக்கவே இல்லை. நாளுக்கு நாள் அதன் தேவை அதிகரித்து கொண்டேதான் போகிறது.

முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு போன் என்று இருந்தது மாறி, ஆளுக்கொரு போன் என்றானது. இப்போது அலுவலக தேவைகளுக்கு ஒன்று, தனி பயன்பாட்டிற்கு ஒன்று என இரண்டு போன்களை தூக்கி சுமக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். செல்போனில் பயன்பாடு இவ்வளவு அதிகமான நிலையில் செல்போனினால் மேற்கொள்ளப்படும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் குற்றங்களை போல, செல்போனால் ஏற்படும் பாலியல் குற்றங்களும் அதிகம். இணையத்தில் ஆபாச படங்களை தேடித்தேடி பார்க்கும் ஜொள்ளு பார்ட்டிகளை குறிவைத்தே இத்தகைய குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
இதையும் படிங்க: தொட்டா நீ கெட்ட.. வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ கால்.. சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய எம்.எல்.ஏ..!

இதன் ஒருபகுதியாக சமூக வலைதளங்களில் ஆபாச சேட்டிங்கு அழைத்து, அரைகுறை ஆடைகளுடன் இருப்பவர்களை வீடியோ எடுத்து பின்னர் அவர்களையே மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் வளைகுடா நாட்டில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். மாடல் போல உள்ள பெண் ஒருத்தி தனக்கு மெசேஜ் செய்வதை பார்த்து அந்த 60 வயது வாலிபர் ஜொள்ளு வடித்துள்ளார். அந்த பெண் தான், மாடலிங் செய்து வருவதாகவும், கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும் கூறி உள்ளார். தனக்கு ஏதாவது பண உதவி செய்ய முடியுமா எனவும் கேட்டுள்ளார். பெண்ணின் கஷ்டத்தை கேட்டு மனமிறங்கிய பெரியவர், முதலில், 5,000 ரூபாய் அனுப்பியுள்ளார். பின், அவ்வப்போது அந்த பெண் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.

ஒருநாள் வீடியோ சாட்டிங் செய்ய அந்த பெண் இவரை அழைத்துள்ளாள். அவரும் ஆர்வமுடன் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அரைகுறை ஆடையுடன் தோன்றிய அப்பெண், அவரையும் ஆடைகளை களைய சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சபலத்தில் 60 வயது இளைஞரும் ஆடைகளை களைய, அதை அப்பெண் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர், அந்த வீடியோவை இவரின் மனைவிக்கு அனுப்பி விடுவதாக கூறி அப்பெண் மிரட்டி உள்ளார். பயந்து போன அவரிடம் இருந்து 80 சவரன் தங்க நகைகளை கூரியர் வாயிலாகவும், பணத்தை வங்கி கணக்கு வாயிலாகவும் வாங்கி உள்ளார். மேலும் தொடர்ந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதனால் அந்த 60 வயது நபர் விருதுநகர் எஸ்.பி., கண்ணனிடம் நேரடியாக புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., அசோகன், இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார், மோசடி பேர்வழியான அப்பெண்ணை கும்பகோணத்தில் கைது செய்துனர். நேற்று முன்தினம் சாத்துார் அழைத்து வந்தனர். விசாரணையில் அப்பெண் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில், 'நந்துமா' என்ற பெயரில் கணக்கு வைத்திருப்பது தெரிந்தது. மாடலிங்கில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது.
நமது 60 வயது வாலிபர் போன்று பலரிடம் பழகி, அவர்களை மிரட்டி பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் பாளையங்குடி அருகே எழவரசநல்லுாரைச் சேர்ந்த அந்த 29 வயதான மோசடி பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் அவரது வங்கி கணக்கில் இருந்த, 61.93 லட்சம் ரூபாயை முடக்கி, விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை மருந்து கொடுத்து பல பெண்களை சீரழித்த மாணவன்..? மாதத்திற்கு 5 பெண்கள் என போலீசார் அதிர்ச்சி தகவல்..!