விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டம் ஆன நிலையில் தீயணைப்புத் துறை வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாய்நாத் என்ற நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். முதலில் பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கலந்து கொண்டிருந்த போது, ரசாயன பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதால் எதிர்பாராதவிதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்ததோடு, இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது முதற்கட்டமாக உயிரிழந்த 6 தொழிலாளர்களில் 4 பேரது உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், இருவரது உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கே பிறகே முழு காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யார் அந்த சார்? அரசு பள்ளி தத்தெடுப்பு, பொங்கல் பரிசு 1000 ரூபாய்… அரசுக்கு எதிராக கிளம்பும் காங்கிரஸ்…சூடுபிடிக்கும் களம்..