திமுக சட்டத் துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொண்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசினார். “இந்த மாநாட்டின் மூலம் நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பியிருக்கிறார்கள். அதேபோல ஒரே அரசு என்கிற நிலையை உருவாக்க மாநிலங்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.

பாஜக பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக வைத்திருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் வைத்திருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கு ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும். இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் இதில் விழுந்துவிடக் கூடாது. இச்சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இக்கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன்.
இந்தத் தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். தங்களின் செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள். அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள். தங்கள் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளைப் பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள். அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்,வெற்றி பெற வேண்டும்.

இப்பவும் நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்க நாம் போராடுகிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி . எந்த ஆளுநர்? மரபுப்படி, இறுதியாகப் பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். என்றாலும். ஒன்றிய அரசுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது. மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இதற்கெல்லாம் தூண்டுகோலாக இருப்பவர் நம்முடைய ஆளுநர்தான்.
2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும். 2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையும். திமுக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க திமுக சட்டத்துறை சளைக்காமல் சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும்." என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி முடிய 13 அமாவாசைதான் இருக்கு.. திமுகவை பொளக்கும் பழனிச்சாமி!
இதையும் படிங்க: புயலாய் புறப்பட்ட 'இளந்தென்றல்'... மன்னராட்சிக்கு மகுடம் சூட அழைக்கும் உடன் பிறப்புகள்..! 'உதித்தது' இன்பநிதி மன்றம்..!