பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது, காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. இதையெல்லாம் மறைத்து உண்மைகளை மவுனமாக்கும் வேலையை காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் செய்கிறார் என எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில், ”ஒரு பெண் ஏடிஜிபி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

"சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது. தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது , இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?
இதையும் படிங்க: சீமானுக்கு என்ன ஆனது?...திராவிட எதிர்ப்பும், பெரியார் எதிர்ப்பும் ஒன்றா?...சரியான பாதையில் பயணிக்கிறாரா?
தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி.
இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ள அவர், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி குறித்தும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் ஆட்சியில்? ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, "சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்" என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா?
"காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை" என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதேபோல் அண்ணாமலையும் ”விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை. காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்?
காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள், முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.
தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏடிஜிபி அந்த்ஸ்த்தில் உள்ள பெண் உயர் அதிகாரிக்கு பாதுகாப்பில்லை என்கிற விஷயம் டெல்லி உள்துறை அமைச்சகம் வரை தமிழகத்தின் செயலின்மையை எடுத்து காட்டுவதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக உள்ளது
இதையும் படிங்க: சோனியா காந்தி மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு: குடியரசுத் தலைவர் குறித்த பேச்சால் சிக்கல்