துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் முதல்முறையாக 2019 ஆம் ஆண்டு வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். துரைமுருகன் இல்லம், கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் 10 லட்ச ரூபாய் அளவில் பணம் சிக்கியது. பெரிய அளவில் வேட்டை கிடைக்கும் என்று சென்ற வருமான வரித்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இதையடுத்து மேலும் விசாரணையில் குதித்த வருமான வரித்துறையினர் கதிர் ஆனந்துக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கொடவுனில் ரெய்டு நடத்தியதில் அங்கு பதுக்கப்பட்டிருந்த ரூ.11.4 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. வாக்காளர் பட்டியல், கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து இந்தப்பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என்பது சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் வாக்குமூலத்தில் ஐடி உறுதி செய்தது.

இதையடுத்து தேர்தல் அதிகாரி வேட்பாளர் கதிர் ஆனந்த் தாக்கல் செய்த வருமான கணக்குக்கும் கைப்பற்ற பணத்திற்கும் வித்தியாசம் இருப்பதை அடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்ய புகார் அளித்தார். மாஜிஸ்ட்ரேட் அனுமதி பெற்று கதிர் ஆனந்த், பூஞ்ச்சொலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பாஜக எம்.பி.,க்களை வெறுப்பேற்றிய கதிர் ஆனந்த்... அமலாக்கத்துறை ரெய்டின் அதிர்ச்சி பின்னணி... நடுக்கத்தில் துரைமுருகன் குடும்பம்..!
அதன் பின்னர் நடந்த தேர்தலில் கதிர் ஆனந்த் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் 2024 மக்களவை தேர்தலிலும் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் இந்த வழக்கின் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையும் இதில் குதித்துள்ளது.
பொதுவாக வருமான வரித்துறை ரெய்டு, லஞ்ச ஒழிப்பு புகார், ஹவாலா பணம் கைப்பற்றுதல், போதை பொருள் கடத்தி சிக்குதல் போன்ற விவகாரங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக சந்தேகப்பட்டால் அமலாக்கத்துறை பி.எம்.எல்.ஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள். கூடுதலாக ரெய்டு நடத்தி ஆவணங்களை சேகரிப்பார்கள்.
இதுபோன்ற முன்னுதாரணங்கள் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு, செந்தில் பாலாஜி ஜாப் ராக்கெட் வழக்கு, அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு உள்ளிட்ட வழக்குகள், ஜாஃபர் சாதிக் வழக்கிலும் ரெய்டு வந்ததை காணலாம். அமலாக்கத்துறை ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டால் அதன் அடிப்படையில் ரெய்டுக்கு வரலாம். அந்த அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் 11.4 கோடி சிக்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடக்கிறது.
இன்று காலை கதிர் ஆனந்த் வீடு, அவரது கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் வீடு, கொடவுன் உள்ளிட்ட இடங்களில் ஒருசேர ரெய்டு நடத்தியது அமலாக்கத்துறை. இதில் கதிர் ஆனந்த் துபாயில் இருப்பதாலும், அவரது இல்லத்தில் யாரும் இல்லாததால் யாராவது சம்பந்தப்பட்டவர்கள் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையில் அமலாக்கத்துறை காத்திருக்கிறது. பொதுவாக இதுபோன்ற ரெய்டுகளில் சம்பந்தப்பட்டவர் அல்லது அவரது நெருங்கிய உறவினர், அல்லது அவரது சம்பந்தப்பட்ட நபர்கள் இருந்தால் மட்டுமே வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ ரெய்டு நடத்த உள்ளே போகும். சாவி இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களை வைத்துக்கொண்டு உடைத்து உள்ளே செல்வார்கள்.
ரெய்டின்போது சாட்சிக்காக அமலாக்கத்துறை அல்லாத பொது அதிகாரி ஒருவர் உடனிருப்பார். கதிர் ஆனந்த் இல்லத்தில் அவர் இல்லாததால் சம்பந்தப்பட்டவர்கள் வருகைக்காக 6 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் காத்திருக்கின்றனர். இதற்கிடையே இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் அங்கு வீட்டில் யாரும் இல்லை யார் ரெய்டுக்கு வந்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது என்று பேட்டி அளித்தார்.
ஆனாலும் திமுகவினரிடையே இந்த ரெய்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக முதல்வரை சந்தித்து துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்திலும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. உள்ளே வருபவர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்திலு அதிகாரிகள் சோதனைக்கு வரலாம் என்கிற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சோதனை முழுக்க முழுக்க 2019 தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட் 11.4 கோடி ரூபாய் வருமான வரித்துறை வழக்கு அடிப்படையில் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை ரெய்டு என்று அமலாக்கத்துறை தரப்பில் விசாரித்தபோது தெரிவித்தனர். வருமான வரித்துறை கைப்பற்றிய பண விவகாரத்தில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு நகர்ந்துள்ளது. ரெய்டுக்கு பின் கைப்பற்றப்படும் ஆவணங்கள், ஒருவேளை கூடுதலாக ஏதாவது சிக்கினால் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோரை விசாரிக்கும்.

PMLA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கும் இதற்கு தனியாக கதிர் ஆனந்த் வழக்கை சந்திக்க வேண்டும். இந்த வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறை விசாரணைக்கும் கதிர் ஆனந்த் சென்று வந்துள்ளார். இந்த ரெய்டுக்கும் துரைமுருகன் கீழ் உள்ள கனிம வளத்துறை, மணல் முறைகேடு சம்பந்தமாக ரெய்டு நடத்தியதற்கும் சம்பந்தமில்லை என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சற்று பதற்றமாகவே இருப்பது தெரிகிறது. இந்நிலையில் துபாயில் உள்ள கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பேசியதாகவும் தனது உறவினர்களை வைத்து சோதனை நடத்தலாம் என கதிர் ஆனந்த் தெரிவித்த அடிப்படையில் சற்று நேரத்தில் கதிர் ஆனந்த் இல்லத்திலும்ரெய்டு தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை ரெய்டு... இரவோடு இரவாக காவல் அதிகாரிகள் மாற்றம்... வசமாக சிக்கும் திமுக எம்.பி., கதிர் ஆனந்த்..!