திமுக தொண்டரைத் தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
கடந்த 2022 பிப்.19 அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக தொண்டர் நரேஷ்குமார் என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். நரேஷ்குமாரை தாக்கி அரை நிர்வாண கோலத்தில் அழைத்து வந்தது சர்ச்சையானது. இந்தப் புகாரின் பேரில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி வழக்கு தண்டையார்பேட்டை போலீஸார் பதிவு செய்தனர். மேலும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், “திமுக உறுப்பினரான நரேஷ்குமார் மீது ஏற்கெனவே 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நரேஷ்குமாரை ஆயுதம் கொண்டு யாரும் தாக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று வாதிட்டார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், “போலீஸாரின் விசாரணையில் மனுதாரரான ஜெயக்குமாரும் அவருடைய ஆதாரவாளர்களும் ஆயுதங்களைக் கொண்டு நரேஷ்குமாரை தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவேதான் ஜெயக்குமார் உள்ளிட்ட 20 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக” தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுதாரரான ஜெயக்குமார் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். கீழமை நீதிமன்றத்தின் விசாரணையில்தான் குற்றச்சாட்டு உண்மையா, இல்லையா என்பது தெரியவரும். எனவே, முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய முடியாது' என மறுப்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை நமதே... தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்-ன் பதிவால் பரபரப்பு!!
இதையும் படிங்க: ஹவுஸ் ஓனருக்கு விபூதி அடித்த கும்பல்.. பாத்ரூம் கழுவும் சாக்கில் நகைகள் அபேஸ்.. திரிபுரா திருடர்களை தூக்கிய போலீஸ்..