தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு இந்த ஆண்டு ஜூலையில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணில் கமல்ஹாசனின் மநீமவுக்கு ஓரிடம் வழங்கப்பட உள்ளது. இதேபோல அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஓரிடம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருந்தார். ஆனால், இந்தத் தகவலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்தார். இதனால், அதிமுக - தேமுதிக கூட்டணியில் பிளவு என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அரியலூர் செந்துறையில் தேமுதிகவின் 25ஆம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன், “எங்கள் பொதுச்செயலாளர் பிரேமலதாவை பற்றி பேச திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு தகுதி இல்லை. எங்களுக்கு ராஜ்யசபா சீட் தருகிறார்கள் அல்லது தரவில்லை என்பது பற்றியெல்லாம் திருச்சி சிவா பேச தேவையில்லை. ஏனெனில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று எங்கள் பொதுச்செயலாளர் பிரேமலதா துணை முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: மாமா மனசிலாயோ..! திமுக அமைச்சருடன் கள்ள உறவு...புட்டுப்புட்டு வைக்கும் அதிமுக சீனியர்கள்..!

தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த அளவுக்கு இரண்டு கட்சியினரும் ஒன்றுமையாக உள்ளோம். எங்கள் அண்ணியார் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். அதிமுக -தேமுதிக இடையே என்ன மாதிரியான ஒப்பந்தம் உள்ளது என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில்தான் இருப்போம். கூட்டணியை உடைக்கவே இப்போது சர்ச்சைகளை உருவாக்க பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மாநிலங்களவை எம்.பி.க்கு அதிமுகவுடன் ஒப்பந்தம் போட்டதாக பிரேமலதா சொன்னதற்கே, அப்படி ஒரு ஒப்பந்தம் போடவே இல்லை என்கிற ரீதியில் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்திருந்தார். இந்நிலையில் தேமுதிகவில் இதுபோன்ற நிர்வாகிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு பிரேமலதா என்ன சொல்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: வெறுப்பின் உச்சம்... வீடு தேடிச் சென்ற பாமகவினர் - லெப்ட் ஹேண்டில் டீல் செய்த எடப்பாடியார்..!