ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்டன.அந்த வரிசையில் இணைந்துள்ளது தவெக. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக-நாதக வேட்பாளர்கள் மட்டுமே நேருக்கு நேர் மோதுகின்றன. இந்நிலையில், எதிர்கட்சிகளின் வாக்குகள் கொத்துக் கொத்தாய் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு செல்லும் எனத் துள்ளிக் குதிக்கிறார்கள் நாதக தம்பிகள். அவர்களது நம்பிக்கைக்கு 'யானை' தும்பிக்கை கொடுக்கும் எனக் காத்திருந்த நிலையில் அந்த நம்பிக்கையில் தற்போது 'யானை' காலை வைத்து ஓங்கி மிதித்து சிதறடித்துள்ளது.
“ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளது நாதகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இது தொடர்பாக புள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பாஜக, அதிமுக வழியில் பயணிக்கும் விஜய்; தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கட்சித் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். நாதக வேட்பாளராக சீதாலட்சுமி களம் காண்கிறார்.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு கவனம் பெற்றது. ஆனால், இதே தொகுதியில் முன்னர் நடந்த இடைத்தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் வெற்றி பெற்றதாகக் கூறி ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில் தவெக-வும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. திமுகவை அரசியல் எதிரியாக மாநாட்டிலேயே வெளிப்படையாகவே மாநட்டில் அறிவித்து இருந்தார் விஜய். விஜயுடன் சீமான் கூட்டணி அமைக்கலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால்,விஜயை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் சீமான். ஆகையால் எதிர்ப்பு நாதக-தவெக என பரபரத்து கொண்டிருக்கிறது. நாதகவை விட்டு வெளியேறி தவெகவில் சில முக்கிய நிர்வாகிகள் இணைந்தனர்.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக- நம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் அரசியல் எதிரியான திமுகவுக்கு விஜய் கட்சியினர் நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள். அடுத்து அவர்களுக்குள்ள ஒரே ஆப்ஷன் நாதக வேட்பாளருக்கு வாக்களிப்பது மட்டுமே.இந்த நேரத்தில் இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கும் தவெக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ''யாருக்கும் ஆதரவு இல்லை'' என அழுத்தம் திருத்தமாகவே அறிவித்து இருக்கிறது தவெகெ.
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் எனச் சுட்டிக்காட்டவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாதகவினர் கடும் அதிர்ச்சி அடைந்த்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா?... நாம் தமிழர் தொண்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு; பரபரக்கும் ஈரோடு கிழக்கு...!