தமிழக வெற்றிக் கழகத்தின் உடைய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக்கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கூட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியானது குறித்து விளக்கம் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
2% ஓட்டு கூட கிடைக்காது:
தமிழ்நாடு அரசியல் விஜய் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகரான ஜான் ஆரோக்கிய சாமி பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை விட தன்னையே அதிகமாக முன்னிலைப்படுத்துவதாகவும், இப்படியே போனால் தமிழக வெற்றிக் கழகம் 2 சதவீத வாக்குகளைக் கூட வாங்காது என்றும் ஜான் ஆரோக்கியசாமி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ஆப்சென்ட் ஆன விஜய்... புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

இது தமிழக வெற்றிக் கழகத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், இன்று மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தவெக கட்சி தலைவர் விஜய் பங்கேற்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை. சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் விஜய் 69 படப்பிடிப்பில் அவர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னிலைப்படுத்தப்படும் புஸ்ஸி ஆனந்த்:
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தின் மேற்பார்வையில் தான் தொண்டர்களை ஒருங்கிணைப்பு, ஆலோசனை கூட்டங்களை நடத்துவது, நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்டவை நடந்து வருகிறது. பொது இடங்களில் தவெக தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்த் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யையும், புஸ்ஸி ஆனந்த் மூலமாக மட்டுமே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தின் முகமாக உள்ள விஜய்யை முன்னிலைப்படுத்தாமல், தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்தின் போட்டோவை பெரிதாக பயன்படுத்துவது கட்சிக்கு எந்த வகையிலும் பலனளிக்காது என்றும், இதனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் பின்னடைவே ஏற்படும் என்றும் ஜான் ஆரோக்கியசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
காழ்ப்புணர்ச்சியால் வதந்தி பரப்பப்படுகிறதா?
இந்த கூட்டமானது தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது அது புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு விளக்கம் சொல்லும் கூட்டமாக மாறியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ லீக்கான விவகாரம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்களிடையே உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். காழ்ப்புணர்ச்சியால் நம் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுக்களைக் கண்டு யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அனைவரும் கட்சியின் வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களுடன் அனைவரும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும்” எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்... பட்டியலுடன் வந்த புஸ்ஸி ஆனந்த்... நிராகரித்த விஜய்