நமக்காக ஒருவர் வியர்க்க விறுவிறுக்க நடக்கிறாரே என்ற உணர்ச்சி, அவர்கள் முன்னெடுக்கும் கருத்துக்களுடன் நம்மை ஒத்துப்போக செய்வதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே காலம்காலமாக அரசியல்வாதிகள், தங்கள் கொள்கைகளை, கோட்பாடுகளை, கோரிக்கைகளை மக்களிடம் எளிதில் கொண்டு செல்லும் ஒரு ஆயுதமாக நடைபோராட்டத்தை பின்பற்றி வருகின்றனர்.
ஏன், இப்போ இதை சொல்கிறோம் என்றால்... அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும், மாநில அளவில் தமிழக பாஜகவும் நடைபேரணி போராட்டத்தை அறிவித்துள்ளன. எதற்காக? ஏன்? என்பதை இப்போது பார்ப்போம்..
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய ஒரு விவகாரம் நாடுமுழுவதும் பெரும் புயலைக் கிளப்பியது. பாபாசாகேப் அம்பேத்கரின் புகழை மறைக்கும் வகையில் அமித் ஷா பேசி விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரின் புகழை பரப்பும் வகையிலும், அரசியல் சாசனத்தை மத்திய ஆளும் பாஜக அரசு குழிதோண்டி புதைப்பதாகவும் அதன் மாண்பை மீட்டெடுக்கும் வகையிலும் நடைபேரணி ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

கடந்த மாதம் 26-ந் தேதி கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால் அன்றைய இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இயற்கை எய்தியால் 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி 7 நாட்கள் துக்கம் முடிந்தநிலையில் நாளை அதாவது ஜனவரி 3-ந் தேதி இந்த நடைபேரணி நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரசார பேரணி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் நடத்தப்படும் என்றும் வருகிற ஜனவரி 26-ந் தேதி அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிர மாநிலம் மோவ் நகரில் பொதுக்கூட்டத்துடன் இந்த பேரணி நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் இந்த பேரணி என்றால் மாநில அளவில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜகவின் மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நீதி பேரணி நடைபெறும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

தமிழக பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி தலைமையில் மதுரையில் தொடங்கும் இந்த பேரணி சென்னை வரை நீடிக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்து முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், தமிழக பாஜக மகளிரணியின் நீதி பேரணி, என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அதே காட்சி அதே நிகழ்வு...அன்று சீமான் இன்று சௌமியா அன்பு மணி... தொடரும் கைது