கேரளா மாநிலம் மதமங்கலம் புனியன்கோடு பகுதியை சேர்ந்தவர் பாஜக நிர்வாகியான ராதாகிருஷ்ணன். அவருக்கு வயது 51. சரக்கு வாகன டிரைவராக அதே பகுதியில் பணி செய்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் வீடு கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கிராம பகுதி என்பதால் அப்பகுதி மக்கள் இருவருக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளனர்.

அப்பகுதி மக்களின் பெருவாரியான தொழில் விவசாயம் தான். இதனால் அப்பகுதிகளில் வனவிலங்குகளிம் நடமாட்டமும், காட்டு பன்றிகளின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். பில்டிங் கான்டிராக்டராக உள்ள சந்தோஷிடம் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி உள்ளது. கேரளாவில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் குழுவில் சந்தோஷ் உள்ளார். அவ்வவ்போது காட்டு பன்றிகளை சுட்டு வீழ்த்தி, அதை பேஸ்புக்கில் பதிவிட்டும் வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு அருகே ரவுடி ஜான் வெட்டி கொலை.. முன்விரோதம் காரணமாக வெறிச்செயல்.. தப்ப முயன்றவர்களை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

அவரது பேஸ்புக் முழுவதும் துப்பாக்கி தாங்கியபடியும், முறுக்கு மீசை வைத்தபடி கம்பீரமாகவும் போட்டோ போட்டு வைத்திருப்பார். இந்த சூழலில் தான், சந்தோஷ் தனது பேஸ்புக்கில் நேற்று மாலை 'இலக்கை வீழ்த்த வேண்டிய வேலை வந்து விட்டது,' என கையில் துப்பாக்கியுடன் பதிவிட்டு உள்ளார். சந்தோஷ் வழக்கமாக போடும்படியான பதிவு என்பதால் யாருக்கும் அது பெரியதாக தெரியவில்லை. அனைவரும் அதை மிக சாதரணமாகவே கடந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் இரவு 7 மணியளவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.

ஆரம்பத்தில் அனைவரும் அதனை பட்டாசு சப்தம் தான் என்று நினைத்துள்ளனர். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த அலறல் சப்தமும், ராதாகிருஷ்ணனின் மகனின் அழுகுரலும் மக்களை உலுக்கி உள்ளது. அக்கம்பக்கத்தினர் அங்கே வந்து பார்த்த போது, காட்டுப்பன்றிகளை வேட்டையாடும் துப்பாக்கியால் ராதாகிருஷ்ணனை சந்தோஷ் சுட்டுவிட்டு தப்பியோடியதை அறிந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராதாகிருஷ்ணனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

விசாரணையில் ராதாகிருஷ்ணனை அங்கு வரவைத்து அவரது நெஞ்சிலேயே சுட்டு கொன்றது தெரிந்தது. இதனிடையே இரவு 07.27க்கு மீண்டும் சந்தோஷ் பேஸ்புக்கில் ஒரு பதிவு வந்தது. அதில், "நான் சொல்லவில்லையா? என் அவளை காயப்படுத்த வேண்டாம் என்று நான் சொல்லவில்லையா? என் உயிரை இழந்தால் என்னால் தாங்க முடியும், ஆனால் என் அவள்.. நான் உன்னை மன்னிக்க மாட்டேன் என்கிற ரீதியில் சந்தோஷ் மீண்டும் பதிவிட்டார்.
இதையடுத்து அவரின் கைப்பேசி சிக்னல் ஜிபிஎஸை வைத்து போலீசார் அவர் இருக்கும் இடத்தை கண்டிபிடித்து கைது செய்தனர். போலீசார் கைது செய்த போது சந்தோஷ் மதுபோதையில் இருந்துள்ளார். போலீசார் வந்ததும் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதாக சந்தோஷ் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: அரியானாவில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை... தொடரும் அரசியல் கொலைகள்..!