சென்னை பழைய வண்ணாரப் பேட்டை பார்வதி அம்மன் கோவிலில் உள்ள 150 ஆண்டுகால ஆலமரம் முழுமையாக அகற்றப்பட மாட்டாது என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப் பேட்டை, மணிகண்டன் 3வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறநிலைய துறை அறிவித்தது. திருப்பணியில் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .
இதையும் படிங்க: 17 ஆண்டு கால வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
அந்த மனுவில், திருப்பணி என்ற பெயரில் கோவிலின் ஸ்தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ கே ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகநாதன், அரச மரத்தை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றக்கூடாது என்று வாதிட்டார்.
இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதாகவும், புதிய கோயிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும் என்றும், பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் இருப்பதாகவும், மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைக்களும் எடுப்பதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு நாவடக்கம் தேவை.. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!