தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.

கட்சி ஆரம்பித்த பிறகு பரந்தூருக்கு சென்றதை தவிர விஜய் பெரிய அளவில் வேறு எதும் செய்யாததால் விமர்சனங்கள் எழுந்தன. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அரசியலில் மிக தீவிரமாக விஜய் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை மாவட்டம், குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், நாளை 13 மாவட்டங்களைச் சேரந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் கால் பதித்த விஜய்.. இந்த 2 தொகுதிகளுக்கு குறி.. திராவிட கட்சிகளுக்கு ஸ்கெட்ச்..!

இந்த கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய்க்கு, விமான நிலைய வளாகத்தில் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பை அளித்தனர். பின்னர், அவர் அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் தங்குவதற்காக கார் மூலம் புறப்பட்டார். இதனால், அவிநாசி சாலை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக, வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விஜயை காண்பதற்காக அதிகளவிலான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூடியுள்ளதால் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க அவிநாசி சாலையைப் பயன்படுத்தாமல், மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திடீரென தவெக தொண்டர் செய்த காரியம்; மிரண்டு போன விஜய் - வைரல் வீடியோ!