மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர்.

தற்போதுள்ள 1995-ம் வருடத்திய வக்ஃபு சட்டத்தில் 40 திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த மசோதா ((Waqf (Amendment) Bill, 2024)) மற்றும் முசல்மான் வக்ஃபு ரத்து மசோதா (( Mussalman Wakf (Repeal) Bill, 2024)) ஆகியவற்றை தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: வக்ஃபு வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் எவ்வளவு, அசையா சொத்துக்கள் மதிப்பு எவ்வளவு..?
இந்த சட்டத்திருத்தம் கூறுவது என்ன?.. இஸ்லாம் அல்லாத ஒருவர் அல்லது 5 வருடங்களாக இஸ்லாத்தை பின்பற்றாத ஒருவர் வக்ஃபு அதாவது நன்கொடை கொடுக்க இயலாது. வக்ஃபு வசம் உள்ள சொத்துக்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் பத்திரப்பதிவு செய்துவிட வேண்டும். ஒருவேளை அந்த சொத்தில் தகராறு ஏற்பட்டால் இனி வக்ஃபு வாரியம் முடிவு எடுக்க முடியாது. ஒட்டுமொத்தமாக வக்ஃபு சொத்துக்களின் மேலாண் உரிமை வாரியத்திடம் இருந்து அரசுக்கு செல்கிறது. அவ்வளவுதான்.

அதேபோன்று மத்திய வக்ஃபு கவுன்சிலிலும் மாற்றம் ஒன்றை இது கொண்டு வருகிறது. இதுவரை இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் மட்டும்தான் இந்த கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இனி முஸ்லீம் அல்லாத இரண்டு பேர் இந்த கவுன்சிலில் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இருக்கின்ற கவுன்சிலின் இஸ்லாமிய உறுப்பினர்களில் இரண்டு பெண்களும் இடம்பெற வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் விடிய விடிய விவாதம் நடைபெற்று மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இன்று மாநிலங்களவையில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் அந்த கருப்புப் பட்டையை அணிய மறுத்து விட்டனர்.
இதையும் படிங்க: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. பாஜக வெளிநடப்பு, அதிமுக ஆதரவு..!