என்கவுண்டர் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி - க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் மனைவியை, போலீசாருடன் சென்று சந்தித்த அப்போதைய உதவி ஆணையர் இளங்கோவன், இனிமேல் கத்தியை கையில் எடுத்தால் எலும்பை உடைத்து விடுவதாகவும், என்கவுண்டர் செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், அப்போதைய உதவி ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபி - க்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: ஒரு குப்பைத்தொட்டிக் கூட இல்லாத நகராட்சி.. கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய மனித உரிமை ஆணையம்..!
மனித உரிமை ஆணையத்தின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, அப்போதைய உதவி ஆணையர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விளக்கமளிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் தனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், தற்போது பணியிள் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவும் இளங்கோவன் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், உரிய நடைமுறைகளை பின்பற்றி, விளக்கமளிக்க அவகாசம் வழங்கிய பிறகே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், பிரதான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் மனித உரிமை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முழு அளவில் விசாரணை நடத்தப்படாத நிலையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு, மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, மனித உரிமை ஆணையத்தின் இறுதி உத்தரவு வரும் வரை, அப்போதைய உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
மேலும், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விரைந்து முடிக்கவும் மனித உரிமை ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மனோ தங்கராஜ் மனைவி மீதான நில அபகரிப்பு வழக்கு.. ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு..!