பொங்கல் பண்டிகை என்றால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு புகழ் பெற்றதாகும். அவனியாபுரம் தொடங்கி பாலமேடு, மூன்றாம் நாள் உலக புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டும் நடக்கும். இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார், டிராக்டர், பைக் போன்ற பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதுபோக தங்க காசுகளும் முக்கிய பிரமுகர்களால் வழங்கப்படும்.
இது தவிர புதுக்கோட்டை ஜல்லிக்கட்டும், திருச்சி ஜல்லிக்கட்டும், சிராவயல் எருது விடும் நிகழ்வும் புகழ் பெற்றவை. இது தவிர ஆண்டு முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடந்துக்கொண்டுதான் இருக்கும். ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வளர்ப்போர் தங்கள் வீட்டு பிள்ளைகளாக கருதி வளர்ப்பர்.

காளைகளை அதிக செலவு செய்து வளர்த்து ஊர் ஊராக அழைத்து சென்று ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்க ஆகும் செலவுக்கு கிடைக்கும் அண்டா, குண்டா, சைக்கிள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல ஆனால் காளை பங்கேற்ற மகிழ்வும், வென்றால் அந்த மகிழ்வும் தனி. சிறந்த காளைகளுக்கும் டிராக்டர் பரிசு உண்டு. இதற்காக எதையும் தியாகம் செய்ய தமிழ் மக்கள் தயாராக இருப்பார்கள்.
இதையும் படிங்க: கொஞ்சம் பார்த்து கேள்வி கேளுங்க... செய்தியாளரிடம் டென்ஷனான அமைச்சர் மூர்த்தி!
இதேபோல்தான் மாடுபிடி வீரர்களும். எப்போது வேண்டுமானாலும் உயிர் போய்விடும், காயம்பட்டு ஊனமாகலாம், ஆனாலும் வீரர்களுக்கு பஞ்சமில்லை. களத்தில் குதிப்பது மட்டுமே அவர்கள் சிந்தனை காயம் எல்லாம் தூசுதான். ஆண்டுதோறும் பாதுகாப்பாக நடத்தப்பட்டாலும் வீரர்கள் உயிரிழப்பு கவலை தரும் விஷயம் தான். இதற்காக தியாகம் செய்யும் இளைஞர்களை சமீப ஆண்டுகாலமாக போட்டியை நடத்துபவர்கள் நடத்தும் விதம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இதுதான் இப்படி என்றால் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அலப்பறை தனி. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் பட்டியலின சமூகத்தினர் காளைகளை அவிழ்த்து விட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த ஆண்டும் அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல் இரண்டு முறை சிறந்த மாடுபிடி வீரருக்கான பரிசை வென்ற தமிழரசன் இம்முறை டோக்கன் கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு போய் கேட்டபோது போலீஸார் தடியால் தாக்கி அனுப்பியதாக கூறி கண்கலங்கினார். ஜாதி விளையாடுகிறது போட்டியிலிருந்து ஒதுக்கப்பட்டதாக கண்கலங்கினார்.
அலங்காநல்லூர் போட்டி காலை 7 மணிக்கு தொடங்க வேண்டும் ஆனால் துணை முதல்வர் உதயநிதி தாமதமாக 8-10 க்கு வந்தப்பின் போட்டி தொடங்கியது.

ஆயிரக்கணக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட வேண்டும், ஆயிரக்கணக்கான வீரர்கள் காத்திருந்தும் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இதனால் மாலை 6-10 க்கு போட்டி முடியும் போது ஒரு மணி நேர தாமதத்திற்கான காளைகளுக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
உதயநிதி வந்தபோது தனது மகன் இன்பநிதியை உடன் அழைத்து வந்தார். இன்பநிதி சாதாரணமாக இருந்தாலும் அமைச்சர்கள், அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக பம்மியது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது. உதயநிதிக்கு சால்வை அணிவித்த அமைச்சர் மூர்த்தி இன்பநிதிக்கும் சால்வை அணிவித்தார்.
உதயநிதியுடன் அமைச்சர்கள் பி.டி.ஆர், மூர்த்தி, எம்பி தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்தனர்.
தங்க தமிழ் செல்வனில் ஆரம்பித்து பிடிஆர், மூர்த்தி, இன்பநிதி, உதயநிதி, ஆட்சியர் சங்கீதா அடுத்து இரண்டு எம்.எல்.ஏக்கள் அமர்ந்திருந்தனர். இன்ப நிதியுடன் வந்த 2 நண்பர்கள் பின்னால் நின்றிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து தன் தந்தையிடம் நண்பர்கள் பற்றி சொன்னார் இன்பநிதி. இதையடுத்து அமைச்சர் மூர்த்திக்கு பக்கத்தில் அவர்களை அமர்த்த இன்பநிதி முயன்றார்.

ஆனால் அமைச்சர் மூர்த்தி அதை அனுமதித்தால் இன்பநிதியை தன் அருகில் அமர வைக்க முடியாது என்பதால் உதயநிதியை தாண்டி அமர்ந்திருந்த ஆட்சியர் உள்ளிட்ட மூன்று கட்சியினரை நகர்ந்து உட்கார சொன்னார். இதையடுத்து இரண்டு கட்சிக்காரர்கள் எழுந்து போக ஆட்சியர் கடைசி சீட்டுக்கு அனுப்பப்பட இடைபட்ட இடத்தில் உதய நிதிக்கும் ஆட்சியருக்கும் இடையில் இன்பநிதியின் நண்பர்கள் அமர வைக்கப்பட்டனர்.
போட்டியை பல முன்னணி மூத்த கட்சியினர் நின்றுக்கொண்டு பார்த்தனர். ஜல்லிக்கட்டு ராஜேஷும் அதில் ஒருவர். துணை முதல்வர் உதயநிதியின் பக்கத்தில் கெத்தாக அமரலாம் என நினைத்த ஆட்சியர் சங்கீதா கடைசி இருக்கைக்கு தள்ளப்பட்டு வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து காளைகளை அடக்குவதை இன்பநிதி தனது ட்ரோன் கேமரா மூலம் படமெடுக்க தொடங்கினார். இதை பார்த்து ஆர்வமான உதயநிதி தான் அதை வாங்கி ஆர்வத்துடன் இயக்கி கொண்டிருந்தார். ட்ரோன் இயக்க காவல்துறை அனுமதி வேண்டும். காவல்துறை அனுமதி பிறகு கூட கொடுத்திருக்கலாம். இடையிடையே உதயநிதியிடம் பணம் அடங்கிய கவரை அமைச்சர் மூர்த்தி கொடுத்து வீரர்களுக்கு கொடுக்க சொன்னார். காளைகளுக்கும் துணை முதல்வர் சார்பில் சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

அமைச்சர் மூர்த்தியால் தான் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக கடந்த ஆண்டு பகீரங்க பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்திய அபிஜித் சித்தர் மூன்றாவது ஆண்டாக சிறந்த மாடுபிடி வீரராக கார் வென்றார்.இம்முறை முதல் பரிசு அவருக்குத்தான். 20 காளைகளை அடக்கி அமைச்சர் மூர்த்தியிடமே இம்முறையும் பரிசை வாங்கினார்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் உதயநிதி பரிசளிக்காமல் பாதியில் கிளம்பி சென்றுவிட்டார். அமைச்சர் பிடிஆரும், தங்க தமிழ் செல்வனும் கிளம்பி சென்றுவிட்டனர். இன்பநிதியின் நண்பர்களுக்காக ஆட்சியரை எழ வைத்து கடைசி சீட்டுக்கு தள்ளிய அமைச்சர் மூர்த்தியை கண்டிக்காமல் அதை தடுக்காமல் வேடிக்கைப்பார்த்த உதயநிதி மீது விமர்சனம் எழுந்துள்ளது.

அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த செயலை கண்டித்துள்ளனர். ஆட்சியருக்கு உள்ள ப்ரோட்டோகாலை மதிக்காத போக்கை விமர்சித்துள்ளனர்.கடந்த 2011 ஆட்சியை ஒப்பிட்டும், செம்மொழி மாநாட்டில் குடும்பத்தினர் முழுவதையும் முன் வரிசையில் அமரவைத்ததையும், சமீபத்தில் ராஜ்பவனில் அமைச்சர் செந்தில்பாலாஜி, ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோர் பதவி ஏற்றபோதும் குடும்பத்தினரை முன் வரிசையில் அமரவைத்து வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை பின் வரிசையில் அமரவைத்ததையும் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

ஆண்டு முழுவதும் காத்திருந்து துணை முதல்வர் கையால் பரிசு வாங்கலாம் என்று வீரர்கள் ஆவலாக இருக்க பகல் 12 மணி அளவில் கிளம்பிச்சென்ற உதயநிதி பின்னர் வரவில்லை. ஓய்வெடுத்துவிட்டு பரிசளிக்கவாவது வந்திருக்கலாம் நாங்கள் சந்தோஷப்படிருப்போம், மாடுபிடி வீரர்களுக்கும், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் கொடுக்கும் மரியாதை இதுதானா என கட்சிக்காரர் ஒருவர் ஆதங்கப்பட்டார். கடந்த ஆண்டும் இதேபோல் உதயநிதி வந்துவிட்டு பாதியில் எழுந்து சென்று விட்டார்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் விவகாரம் - போராடும் மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய தகவல்!