தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதிலும் அதிமுக வரிசையில் நடக்கும் களேபரங்களுக்கு பஞ்சமே இல்லை. அந்தவகையில் இன்றைய தினம் என்ன நடக்கப் போகிறது என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. துறைசார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பதிலுரையும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. மேலும் வினாவிடை நேரமும் அதனைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் முக்கிய விஷயங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க: சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு..? அமைச்சர் தா.மோ அன்பரசன் விளக்கம்..!
அந்தவரிசையில் இன்றைய தினம் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானமும் இடம்பெற்றுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டம் ஆடை தயாரிக்கும் ஆலையின் விரிவாக்கம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏவும், அதிமுகவின் புதிய கலகக் குரலாக எழுந்துள்ள செங்கோட்டையன் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் அதிமுக எம்எல்ஏக்களான ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்எஸ்எம் ஆனந்தன், கடம்பூர் ராஜு, கே.சி.கருப்பணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பண்ணாரி, ஜெயக்குமார், அம்மன் அர்ச்சுணன் ஆகியோர் மேற்காணும் விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களில் ஏதேனும் ஒரு அதிமுக எம்எல்ஏவை மட்டுமே பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி தருவார். அந்தவகையில் யாருக்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி தருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை செங்கோட்டையனுக்கு மட்டும் வாய்ப்பு தரும்பட்சத்தில் அதிமுகவிற்குள் நிகழும் உட்கட்சி பூசலில் ஆதாயம் தேடும் ஒரு முயற்சியாக அது பார்க்கப்படுகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் என்ற வகையில் ஆர்.பி.உதயகுமாருக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால் சபாநாயகர் என்னமாதிரியான முடிவை எடுப்பார் என்று ருசிகரமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் சந்தித்தார். அவரைத் தொடர்ந்து செங்கோட்டையனும் தனியே சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தவகையில் செங்கோட்டையனின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது. இதற்கு தகுந்தாற்போல் திமுகவும் காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் வெடித்த எம்புரான் பட சர்ச்சை.. முதல்வர் சொன்ன விஷயம் இதுதான்..!