அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் எனற விதி இருந்துவந்தது. அந்த விதியில் தற்போது அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. மேலும் இது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அது தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக அரசு ஊழியர்கள் யாரும் அரசின் முன் அனுமதி ஆணையின்றி ஏதேனும் வணிகம் அல்லது தொழிலில், நேரடியாக அல்லது மறைமுகமாக தன்னை ஈடுபடுத்தவோ, ஏதேனும் வேலையை மேற்கொள்ளவோ கூடாது என்ற விதி உள்ளது. அதாவது, அரசு ஊழியர் அனுமதி ஆணையின்றி தன்னுடைய அலுவலக பணிகளுக்கு ஊறுவிளையாது என்ற வரையறைக்குட்பட்டு, இலக்கியம், கலைத்திறன் அல்லது அறிவியில் தன்மையிலான பணியை எப்போதாவது மேற்கொள்ளலாம்.

ஒருவேளை அந்த பணியை செய்யக்கூடாது என்று அரசு உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர் அச்செயலை செய்யக்கூடாது. இப்படியான விதிகள் நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில் தான் அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973, எந்தவொரு புத்தகத்தையும் வெளியிடுவதற்கு அல்லது எந்தவொரு இலக்கிய அல்லது கலைப் படைப்பிலும் தன்னை வழக்கமாக ஈடுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர், வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை கொடுத்திருக்கு... நீட் விலக்கு பெறுவோம்... மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அரசு ஊழியர்களின் தமிழில் எழுதும் திறன்களை ஊக்குவிக்கும் மற்றும் பாராட்டும் நடவடிக்கையாக, அரசு ஊழியர் முன் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, தகுதிவாய்ந்த அதிகாரியிடம் வெறும் தகவல் கொடுத்து புத்தகங்களை வெளியிடலாம் என்ற வகையில், மேற்கூறிய விதிகளைத் திருத்த அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்யும்போது, புத்தகத்தில் அரசுக்கு எதிரான எந்த விமர்சனமோ அல்லது தாக்குதலோ செய்யப்படவில்லை என்றும், புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரை/உள்ளடக்கமும் இல்லை என்றும் அவர் ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இருப்பினும், வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் அல்லது ராயல்டி பெறுவதற்கு அவர் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து அனுமதி பெற வேண்டும். புத்தகம் அரசின் கொள்கை, செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்திருத்தம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பானது அரசு ஊழியர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்... வேகமெடுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகள்!!