மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் உயர்மட்ட அளவிலான குழுவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் உயர்மட்ட அளவிலான குழு அமைக்க திமுக அரசு முடிவு செய்தது. அதன்படி உயர்மட்ட குழுவை அமைத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.

இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அசோக் வர்தன், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர், பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இடம்பெறுவார்கள்” என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், பாமக ஆகியவை ஆதரித்தன. ஆனால், அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் முதல்வர் ஸ்டாலினுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார். “மாநில அரசின் உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநில உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மாநில சுயாட்சியைக் காக்க அவர் நியமித்திருக்கும் உயர்நிலைக் குழுவை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கிறது. இந்திய அரசியலமைப்பு, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை வலுமையாக இது எடுத்துரைக்கிறது. இதுபோன்ற கட்டமைப்பு கொண்ட ஒரு நாட்டில், எந்த ஒரு மாநிலமும் வஞ்சிக்கப்படக்கூடாது” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.. டெல்லி எஜமானர்களிடம் சொல்லிடுங்க.. நயினாரை நயப்புடைத்த ஆர்.எஸ். பாரதி!!
இதையும் படிங்க: இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்.? துணை முதல்வர் உதயநிதி மெசேஜ்.!